பழமையின் மகிமையை உணர்த்திய டெங்கு


பழமையின் மகிமையை உணர்த்திய டெங்கு
x
தினத்தந்தி 29 Oct 2017 5:05 AM GMT (Updated: 29 Oct 2017 5:04 AM GMT)

‘ஓல்டு இஸ் கோல்டு’ என்று ஆங்கிலத்தில் பழமொழி சொல்வதுண்டு. பழமை எப்போதுமே சிறந்தது என்பது அதன் அர்த்தம்.

‘ஓல்டு இஸ் கோல்டு’ என்று ஆங்கிலத்தில் பழமொழி சொல்வதுண்டு. பழமை எப்போதுமே சிறந்தது என்பது அதன் அர்த்தம்.

நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ விஷயங்களில் நவீனங்கள் புகுந்துவிட்டாலும், மகிமை மாறாத பழமையும், அவ்வப்போது நாங்களும் இருக்கிறோம் என்று நமக்கு நினைவுபடுத்துகின்றன.

உதாரணத்துக்கு மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால் அதன் வளர்ச்சி கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு வந்துவிட்டது. மனித உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விமானத்தில் கொண்டு சென்று வேறு ஒருவருக்கு பொருத்துவது, உலகின் எங்கோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு காணொலி காட்சி மூலம் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வது என்று டாக்டர்களின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

அதற்கேற்ப மருத்துவத்துறையில் அதிநவீன கருவிகளும், புதிய கண்டுபிடிப்புகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

இருந்தாலும் சமீப காலமாக இயற்கை மருத்துவத்துக்கான ஆதரவு குரல் கொடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

இயற்கை வளம் மிகுந்த நம் நாட்டில் மூலிகைகள் மூலம் நோய்களை விரட்டியடித்த நம் முன்னோர்கள் கண்டுபிடித்த மருந்துகள் மிகவும் மகத்துவம் கொண்டவை.

உடலில் ஏற்படும் அத்தனை பிரச்சினைகளுக்கும் பச்சிலை, மரப்பட்டைகள், பூக்கள், காய்கள் போன்றவற்றில் இருந்து மருந்துகளை தயாரித்து குணப்படுத்தியவர்கள் நம் முன்னோர்கள்.

அவர்களை நினைவுகூரும் காலகட்டத்தில் தமிழகம் தற்போது உள்ளது.

எங்கு பார்த்தாலும் டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள் மனித உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருக்கின்றன. மாநிலத்தில் தினமும் பச்சிளங்குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் இளைய தலைமுறையினரை டெங்குவுக்கு நாம் பலி கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

அதனால் டெங்குவை போர்க்கால அடிப்படையில் கட்டுக்குள் கொண்டுவரவேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. டெங்குவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வந்தாலும் முற்றிலும் கட்டுக்குள் வந்தபாடில்லை. டெங்குவை ஒழிக்கும் சக்தி ஆங்கில மருத்துவத்துக்கு இல்லை என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது.

நம் சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் மூலிகை மருந்தே டெங்கு எனும் அரக்கனை வென்று வருகிறது.

அதனால்தான், டெங்குவை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் அரசாங்கமே நிலவேம்பு குடிநீர், மலைவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறுகளை உட்கொள்ளுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அது சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு பணிகளும் மும்முரமாக நடக்கின்றன.

டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கவும், நோய் பாதித்தவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊட்டவும், ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்யும் ஆற்றல் நிலவேம்பு, மலைவேம்பு குடிநீருக்கு உள்ளது என்கின்றனர் சித்த வைத்தியர்கள்.

அதனால் தமிழகம் முழுவதும் சித்தவைத்திய சாலைகளையும், சித்த மருந்து கடைகளையும் மக்கள் தேடிச்சென்று மருந்துகளை வாங்கி வருகிறார்கள்.

இதேபோல் நமக்கு தெரியாத விஷயங்கள் எத்தனையோ மூலிகை மருந்துகளில் மூழ்கி கிடக்கின்றன. மிகக்கொடிய நோய்களைக்கூட எளிதில் குணப்படுத்தக்கூடிய எத்தனையோ மருந்துகள் நம் மூலிகை மருத்துவத்தில் உள்ளன.

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்று பார்த்தால், மஞ்சள் காமாலை நோய்க்கு கீழாநெல்லி இலைகளால் தயாரிக்கப்படும் கசாயத்தை தவிர வேறு மருந்து கிடையாது என்று மார்தட்டி பெருமை சொல்கிறது நம் மூலிகை மருத்துவம்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் ஒவ்வொரு நோய்க்கும், மனித உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் மருந்துகள் கண்டுபிடித்த விதங்களைப்பற்றி ஓலைச்சுவடிகளில் பொறித்து வைத்து இருக்கிறார்கள்.

அவற்றை இன்றைய தலைமுறைகளுக்கு கற்றுத்தந்து நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற மருத்துவ முறையை பாதுகாக்க வேண்டும் என்பது இயற்கை மருத்துவ ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

பழமையின் மகிமையை உணர்ந்தால் மட்டும் போதுமா... அதை நம் வருங்கால சந்ததிகளுக்காக பாதுகாக்க வேண்டியது நம் கடமையல்லவா?

-முக்கூடற்பாசன். 

Next Story