மவுசு குறையாத கொலுசு!


மவுசு குறையாத கொலுசு!
x
தினத்தந்தி 29 Oct 2017 10:30 AM GMT (Updated: 29 Oct 2017 9:56 AM GMT)

பெண்களும், குழந்தைகளும் பல்வேறு விதமான ஆபரணங்களை அணிகிறார்கள். அவை அனைத்துமே அவர்களுக்கு அழகைக் கொடுக்கின்றன. ஆனால் அவர்கள் அணியும் கொலுசு மட்டுமே அழகோடு இதமான இசையையும் வழங்குகிறது.

பெண்களும், குழந்தைகளும் பல்வேறு விதமான ஆபரணங்களை அணிகிறார்கள். அவை அனைத்துமே அவர்களுக்கு அழகைக் கொடுக்கின்றன. ஆனால் அவர்கள் அணியும் கொலுசு மட்டுமே அழகோடு இதமான இசையையும் வழங்குகிறது. அதனால் பெண்களுக்கு கொலுசு மீதான மோகம் ஒருபோதும் தீருவதில்லை. அவ்வப்போது தங்களுக்கு பிடித்த மாடல்களில் கொலுசுகளை வாங்கி அணிந்து வலம் வருகிறார்கள். அவர்களின் ஆசையை தூண்டும் விதத்தில் கொலுசு வடிவமைப்பிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

எத்தனையோ வகையான கொலுசுகள் தயாரிக்கப்பட்டாலும் இந்தியாவில் இன்றும் புகழோடு விளங்குவது சேலம் கொலுசுகள். இங்குதான் கொலுசு கையாலே தயாரிக்கப்படுகிறது. அதனால் தரமும், உறுதியும் கொண்டதாக அது திகழ்கிறது. மராட்டியம், குஜராத், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலும் கொலுசுகள் தயாரிக்கப்படுகின்றன. அவை இயந்திரங்களில் தயாராகிறது.

சேலம் கொலுசுகளுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. 1930-ம் ஆண்டுவாக்கில் சேலத்தில் சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு அவர்கள் வெள்ளி கொலுசு தயாரிப்பதை கற்றுக் கொண்டு அந்த தொழிலில் ஈடுபட தொடங்கினார்கள். வெள்ளிக்கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி உள்ளிட்ட ஆபரணங்களை கலைநுட்பத்தோடு அவர்கள் தயாரித்தார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பால், தொழில் மிகுந்த வளர்ச்சியடைந்தது. தயாரிப்பும் மேம்படுத்தப்பட்டது. தற்போது சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்று கிறார்கள்.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வியாபாரிகள் வெள்ளிக்கட்டிகளை அனுப்பி வைக்கிறார்கள். அவைகளை கொலுசுகளாகவும், அரைஞான், மெட்டியாகவும் சேலத்தில் தயாரித்து அனுப்புகிறார்கள். தயாரிப்பிற்கு ஏற்றபடி கூலியினை பெற்றுக் கொள்கிறார்கள்.

சேலம் மாநகரில் கைகளால் தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள் 58 கிராம் முதல் 65 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. கலை நயமிக்க வேலைப்பாடுகள் நிறைந்திருக்கிறது. இந்த கொலுசுகளுக்கு 3 ஆண்டுகள் வரை உத்தரவாதம் அளிக் கிறார்கள்.

முன்பெல்லாம் கிராமத்து பெண்கள் 400 கிராம் வரை எடைகொண்ட கொலுசுகளை அணிவார்கள். அந்த கொலுசுகள் நீடித்து உழைக்கவேண்டும் என்றும் விரும்புவார்கள். அவை 3 ஆண்டுகள் வரை உழைக்கும். ஆனால் இன்றைய டீன்ஏஜ் பெண்கள் பேன்சி கொலுசு, லைட் வெயிட் கொலுசு, எஸ்.செயின் கொலுசு, மேனகா கொலுசு ஆகியவைகளை விரும்பி அணிகிறார்கள். அந்த வகை கொலுசுகள் 100 கிராம் முதல் 250 கிராம் வரை இருக்கும்.

சேலம் மாவட்டத்தில் குடிசை தொழில் போலவும் கொலுசு தயாரிக்கிறார்கள். வீடுகளில் ஆண்களும், பெண்களும் கொலுசு தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அதற்கென்று தனிப் பயிற்சி எதுவும் எடுப்பதில்லை. தலைமுறை வழியாக கற்றுக்கொள்கிறார்கள்.

கொலுசு தயாரிப்பு என்பது 16 கட்டங்களை கொண்டதாக இருக்கிறது. அவை: கம்பி மிஷின், உருக்குக்கடை, மிஷின் பாலிசி, கைமெருகுகடை, பூ மிஷின், பொத்துகுண்டு வளையம் மிஷின், அரும்பு மிஷின், குஷ்பூ பட்டறை, எஸ்.செயின், சாவித்ரி சலங்கை, பட்டை மிஷின், குப்பாமிஷின், கெட்டி பூ மிஷின், பொடிமிஷின், கன்னிமாட்டும் மிஷின், லூஸ் பட்டறை! இத்தனையையும் கடந்த பிறகே கொலுசு முழுவடிவம் பெறும். அதற்கு 2 முதல் 3 நாட்களாகும். வெள்ளி கொலுசுவில் செம்பு, பித்தளை ஆகியவை ‘சேதாரம்’ என்ற பெயரில் சேர்க்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சேலத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் 50 டன் அளவுக்கு வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளியிலான ஆபரண பொருட்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆண்டு முழுவதும் சீசன் இல்லாவிட்டாலும் கூட பண்டிகை காலங்களிலும், முகூர்த்த காலத்திலும் சேலத்தில் வெள்ளி தொழில் அமோகமாக நடைபெறும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளி விலையேற்றம், ஜி.எஸ்.டி.வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் சேலத்தில் வெள்ளி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. அதையும் கடந்து சேலம் கொலுசு ஒலி திக்கெட்டும் கேட்கிறது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும், பட்டறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கொலுசு தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். சிவதாபுரத்தை சேர்ந்த லட்சுமி சொல்கிறார்:

“நான் 15 வயதில் இருந்து கொலுசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். திருமணத்திற்கு பின்பும் இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன். இதற்காக நான் பயிற்சி ஏதும் எடுக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ததை பார்த்து நானும் கற்றுக் கொண்டேன். வெள்ளியை உருக்கி கம்பி இழுத்தல், கொலுசுவில் டிசைன் போடுதல், பூ வடிவமைத்தல், சலங்கை வைத்தல் போன்ற வேலைகளை பெண்களுக்கு கொடுப்பார்கள்.

வெள்ளி பட்டறைக்கு காலை 9 மணிக்கு வேலைக்கு வந்தால் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு செல்ல முடியும். நாள் ஒன்றுக்கு ரூ.300 வீதம் வாரம் ரூ.1,800 சம்பளம் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அன்றைக்கு ஒருநாள் மட்டும் குழந்தைகளுடன் வீட்டில் இருக்க முடியும். மற்ற நாட்கள் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றால் உடல் சோர்வு இருக்கத்தான் செய்யும். அதை பார்த்தால் வேலை செய்யமுடியாது.

குடும்பச் செலவை சமாளிக்க நான் வேலை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனது மகள் கார்த்திகா 7-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்லவேண்டும். அவள் உயர்ந்த நிலையை அடையும் வரை நான் இயந்திரம் மாதிரி உழைத்தாக வேண்டும். பல வீடுகளில் குழந்தைகளை படிக்க வைக்க கணவன், மனைவி இருவருமே கொலுசு தயாரிக்கும் வேலைக்கு செல்கிறார்கள். இப்ப இருக்கிற விலைவாசியை எடுத்துக் கொண்டால் கூலி குறைவுதான். கொலுசு தயாரிக்கும் தொழில் நலிவடைந்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்” என்கிறார்.

செவ்வாய்பேட்டையை சேர்ந்த சுதா சொல்கிறார்:

“வீட்டில் உள்ள ஆண்களின் சம்பளத்தை வைத்து இப்போது குடும்பத்தை நடத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வேலைக்கு செல்கிறேன். ஆரம்பத்தில் இந்த வேலை சற்று கடினமாக இருந்தது. கற்றுக்கொண்ட பின்பு எளிதாகி விட்டது. வெள்ளிக்கொலுசு மட்டுமின்றி அரைஞான் கொடி, மெட்டி ஆகியவைகளையும் தயாரிக்க கற்றுக் கொண்டேன்.



இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. முன்பு ஆண்டு முழுவதும் வேலை இருக்கும். இப்போது வேலை குறைந்துவிட்டது. ஆண் தொழிலாளர்களுக்கு வேலைக்கு ஏற்றபடி ஒரு நாளைக்கு 400 முதல் 600 ரூபாய் வரை சம்பளம் வழங்குகிறார்கள். பெண்களுக்கு அந்த அளவுக்கு தருவதில்லை. நானும், என் கணவரும் வேலை பார்த்து குடும்பத்தை நடத்துகிறோம். கொலுசு தயாரிக்கும் வேலை மிக நுட்பமானது. மிகுந்த கவனத்தோடுதான் இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் கொலுசுகள் இந்தியா முழுவதும் உள்ள பெண்களின் கால்களுக்கு அழகு சேர்ப்பதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்வோம்” என்கிறார். 

Next Story