விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்கக் கோரி விவசாயிகள் வாக்குவாதம்


விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்கக் கோரி விவசாயிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 29 Nov 2017 10:15 PM GMT (Updated: 29 Nov 2017 6:56 PM GMT)

பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, வேளாண்மை இணை இயக்குனர் செல்வம், கூட்டுறவு இணை பதிவாளர் திலிப்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–

குணசேகரன் (முன்னாள் எம்.எல்.ஏ): பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் கடந்த ஆண்டு பணம் செலுத்திய 60 ஆயிரம் விவசாயிகளில் இன்னம் 12 ஆயிரம் பேருக்கு காப்பீட்டு தொகை கிடைக்க வில்லை. சிவகங்கையை அடுத்த புலியடிதம்பத்தில் 1,067 பேருக்கு இது வரை இழப்பீட்டு தொகை கிடைக்க வில்லை. இது தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கடந்த 10.10.1017ம் தேதிக்குள் பணம் வழங்குவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இது வரை பணம் வழங்க வில்லை.

இதேபோல் மறவமங்கலத்தில் உள்ள வங்கி ஒன்றில் பயிர் காப்பீட்டுத் தொகை செலுத்திய 150 பேருக்கு இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. இவர்கள் எல்லாம் கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பணம் செலுத்தியவர்கள். இந்த பணம் கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துவிட்டு தான் கூட்டத்தை நடத்த வேண்டும்.

சேங்கைமாறன் (தி.மு.க): கடந்த கூட்டத்தில் கூட இது குறித்து நான் ஏற்கனவே பேசினேன். மானாமதுரை திருபுவனம் பகுதியிலும் கூட 600–க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதே போல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருபுவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதியில் குடிக்க தண்ணீர் இல்லை. இதனால் உடனடியாக வைகையாற்றில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்காத நிலையில் தற்போது புதியதாக பயிர் காப்பீடு செய்வதில் எந்த பயனும் இல்லை.

கந்தசாமி(விவசாயி): சாக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காப்பீடு செய்தவர்களுக்கும் இதே பிரச்சினை உள்ளது. மேலும் 5 ஏக்கருக்கு காப்பீடு செய்தால் 2 ஏக்கருக்குத் தான் இழப்பீடு வழங்குகின்றனர். மாவட்டம் முழுவதும் இதே நிலை தான் உள்ளது. எனவே இதற்கு உரிய முறையில் தீர்வு கண்டு விட்டு கூட்டத்தை நடத்த வேண்டும்.

செல்வம்(வேளாண்மை இணை இயக்குனர்): புலியடிதம்மம் பிரச்சினையில் நாங்கள் உறுதி அளித்தது உண்மை தான். அதிலிருந்து தொடர்ந்து நாங்கள் கேட்டு கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. டெல்லியில் தொடர்பு கொண்டு பேசிய போது இந்த வி‌ஷயம் தற்போது நடவடிக்கையில் உள்ளது. ஆனால் எப்போது தர முடியும் என்று உறுதியாக கூற முடியாது என்று கூறிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் லதா காப்பீட்டு கழக அதிகாரிகளுடன் கூட்ட அறையில் இருந்தபடியே பேசினார். அதில் நவம்பர் 30–ந்தேதிக்கு முன்பு பணம் செலுத்தியவர்களுக்கு டிசம்பர் மாதம் 3 வது வாரத்திற்குள் ரூ.3 கோடியே 19 லட்சம் வழங்கப்படும் என்று காப்பீட்டு கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை கூட்டத்தில் இருந்தவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மற்ற பொருட்கள் குறித்த விவாதம் நடைபெற்றது.

இந்திரா(விவசாயி): இளையான்குடி ஒன்றியம், அளவிடங்கான் மற்றும் வண்டல் பகுதியில் பயிரிடப்பட்ட நெல் பயிர்களுக்கு ஏற்கனவே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வீணாகி விட்டது. எனவே இந்த ஆண்டிற்கான பயிர் இழப்பீட்டு தொகை வழங்கும் போது விடுபடாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போஸ்கொ(விவசாயி): அரசு அறிவித்த வறட்சி நிவாரண தொகையை தங்கள் கிராமத்தில் உள்ள 120 விவசாயிகள் பெற முடியாமல் தவிக்கின்றனர். உடனடியாக அந்த நிவாரண தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யாச்சாமி (விவசாயி): வைகை அணையில் சிவகங்கை மாவட்டத்திற்குரிய பங்கினை கடந்த 4 ஆண்டுகளாக நாம் வாங்காமல் விட்டு விட்டோம். இதனால் பூர்வீக பாசன விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் இல்லாமல் வைகையாறும் வறண்டு விட்டது. எனவே நிலத்தடி நீரை காப்பாற்றுவதற்கு நமக்குரிய பங்கை பெற்றுத் தரவேண்டும்.

சந்திரன்(விவசாயி): பெரியாற்று தண்ணீரில் உள்ள நமது பங்கையும் பெற்றுத் தரவேண்டும்.

கூட்டத்தில் தேவகோட்டையை அடுத்த அனுமந்தகுடி மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகள் கூறுகையில், தாழையூர் பகுதியில் உள்ள கோவில் மாடுகள் அனுமந்தங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள 20–க்கும் மேற்பட்ட கிராமங்களில் வயலில் உள்ள நெற்பயிரை அழிப்பதாகவும் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பொருட்களின் மீது விவாதம் நடைபெற்றது.


Next Story