செவிலியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்; திருநாவுக்கரசர் பேட்டி


செவிலியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்; திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 29 Nov 2017 11:00 PM GMT (Updated: 29 Nov 2017 7:40 PM GMT)

செவிலியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கடலூரில் திருநாவுக்கரசர் கூறினார்.

கடலூர்,

சிதம்பரம் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வள்ளல்பெருமான் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று மதியம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கடலூர் வழியாக சிதம்பரம் சென்றார். முன்னதாக கடலூரில் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

3 முறை எம்.பி.யாகவும், 1 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் வள்ளல்பெருமான். தொகுதி மக்களுக்காக சிறப்பான பணியை செய்தார். காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்ட தலித் தலைவர்களில் அவரும் ஒருவர். அவருடைய மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் மனைவி மற்றும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

செவிலியர்கள் கடந்த 2, 3 நாட்களாக பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சரும், முதல்–அமைச்சரும் அவர்களை அழைத்து பேசி இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும்.

மருத்துவமனைக்கு டாக்டர்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் செவிலியர்களும் முக்கியம். அவர்களின் இந்த போராட்டத்தால் நோயாளிகளுக்கு தான் இழப்பு ஏற்படும். செவிலியர்களை 2 கோஷ்டிகளாக உருவாக்கி அவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தாமல் அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக நல்ல தீர்வு காணவேண்டும்.

தமிழகம் முழுவதும் மணல்குவாரிகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஊழல், முறைகேடுகள், நீர்நிலைகள், விவசாயிகளின் நலன் கருதி இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். அதேவேளையில் வீடுகள் கட்டுவது போன்ற கட்டுமானத்துக்கு வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்தோ, சில இடங்களில் உள்ள குவாரிகளை முறைப்படுத்தியோ ஊழல் தவிர்க்கப்பட்டு முறையாக மணல் கிடைக்க நீதிமன்றத்தை நாடி உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் பொதுத்தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் தி.மு.க. ஏற்கனவே போட்டியிட்டது. இதனால் தற்போதும் தி.மு.க.வே போட்டியிடுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு விரைவில் அறிவிக்கப்படும். அவர்கள் தி.மு.க. தேர்தல் பணிக்குழுவுடன் சேர்ந்து பணியாற்றுவார்கள். நானும் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறேன். தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை வரவேற்கிறேன். தேர்தல் என்றாலே வேட்பாளர்கள் பல கோடி செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. இதனால் நல்லவர்கள், மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தேர்தலில் போட்டியிட முடிவதில்லை. தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரவு நேர பிரசாரத்துக்கு தடை விதித்துள்ளது. இதை வரவேற்கிறோம். பிரசாரத்தை கூட ஒரு வாரம் குறைக்கலாம். தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்த அனைத்து கட்சிகளிடமும் பேசி சில சீர்திருத்தங்களை, வழிமுறைகளை அரசும், தேர்தல் ஆணையமும் கண்டறிய வேண்டும்.

ராகுல்காந்தி விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராகிறார். அதன்பிறகு அவரை தமிழகத்துக்கு அழைத்து வந்து பாராட்டு கூட்டம் நடத்தப்படும். நீதிமன்றம் மூலமாக தான் ஜெயலலிதா வாரிசு யார் என்பதை கண்டறிய முடியும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.


Next Story