கிருஷ்ணகிரி அணை மதகு உடைந்தது: மீட்பு பணிகளுக்காக பொதுப்பணித்துறை உயர்மட்ட சிறப்பு குழு இன்று வருகை


கிருஷ்ணகிரி அணை மதகு உடைந்தது: மீட்பு பணிகளுக்காக பொதுப்பணித்துறை உயர்மட்ட சிறப்பு குழு இன்று வருகை
x
தினத்தந்தி 29 Nov 2017 11:00 PM GMT (Updated: 29 Nov 2017 8:32 PM GMT)

கிருஷ்ணகிரி அணையின் மதகு உடைந்ததையொட்டி மீட்பு பணிகளுக்காக பொதுப்பணித்துறை உயர்மட்ட சிறப்பு குழு இன்று வர உள்ளதாக கலெக்டர் கதிரவன் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகு உடைந்ததையொட்டி மாவட்ட கலெக்டர் கதிரவன் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்று (அதாவது நேற்று) மாலை 4 மணி அளவில் கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகில் உடைப்பு ஏற்பட்டு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. தற்போது அதை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. நாளை (அதாவது இன்று) மீட்பு பணிகளுக்காக சென்னையில் இருந்து பொதுப்பணித்துறை உயர்மட்ட சிறப்பு குழு நேரில் வருகிறார்கள். அவர்கள் அணையை ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அணையில் தண்ணீர் வெளியேறும் அளவு அதிகமாக இருப்பதால், அருகில் உள்ள 5-வது மதகில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள்.

தென்பெண்ணை ஆற்றின் தரைமட்ட பாலங்களை யாரும் கடக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும். இதில் மதகின் அளவு 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தற்போதுள்ள சூழலில் 20 அடி தண்ணீர் வெளியேறினாலும், 32 அடி தண்ணீரை அணையில் சேமிக்க முடியும். இதன் மூலம் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பாதிப்பு இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story