உலகிலேயே மிகப் பெரிய ‘பார்பிக்யூ’வை உருவாக்கி சாதனை!


உலகிலேயே மிகப் பெரிய ‘பார்பிக்யூ’வை உருவாக்கி சாதனை!
x
தினத்தந்தி 23 Dec 2017 8:30 AM GMT (Updated: 23 Dec 2017 7:32 AM GMT)

உருகுவே நாட்டில் உலகிலேயே மிகப் பெரிய ‘பார்பிக்யூ’வை (நெருப்பில் வாட்டிய இறைச்சி) உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள்.அங்குள்ள மினாஸ் என்ற சிறிய நகரத்தில் இப்படி பார்பிக்யூ முறையில் கறி சமைத்து புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியிருக்கின்றனர்.

சுமார் 200 சமையல் கலைஞர்கள் இணைந்து, 60 டன் விறகைப் பயன்படுத்தி, மிகப்பெரிய, நீண்ட ‘பார்பிக்யூ’ கறி சமைத்தனர். 16.5 டன் மாட்டிறைச்சி, 14 மணிநேரத்தில் சமைக்கப்பட்டது.

உலகின் மிகப் பெரிய பார்பிக்யூவை உருவாக்கிய உருகுவேயின் முந்தைய சாதனையை 2011-ம் ஆண்டு அர்ஜென்டினா முறியடித்திருந்தது. அவர்களை மீண்டும் வெல்லவே தற்போதைய முயற்சி.

இந்த இரு நாடுகளுக்கு இடையே, யார் அதிக மாட்டிறைச்சியை உற்பத்தி செய்வது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

உருகுவே நாடு, உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முக்கிய இடத்தில் உள்ளது.

தற்போதைய உலக சாதனைக்குப் பயன்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி, போட்டிக்கு முன்பு, சமைக்கப்பட்ட பிறகு என இரண்டுமுறை எடைபார்க்கப்பட்டது.

புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைக்க, இந்த இறைச்சியின் எடை, அர்ஜென்டினாவின் லா பாம்பா நகரில் நடந்த போட்டியில் பயன்படுத்தப்பட்ட இறைச்சி அளவான 9.16 டன்களைவிட அதிகமாக இருக்கவேண்டும்.

உருகுவே நடத்திய ‘பார்பிக்யூ’ சாதனை முயற்சியில், சமைக்கப்பட்ட மாட்டிறைச்சியின் எடை, 10.36 டன்கள் இருந்தது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உருகுவே சமையல்கலைஞர் ஒருவர், “இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், கின்னஸ் சாதனை படைப்பது அல்ல. அர்ஜென்டினாவை முறியடிப்பதே” என்றார்.

‘பார்பிக்யூ’ இறைச்சியுடன் சாப்பிட, 4 ஆயிரம் கிலோ எடை அளவுக்கு ரஷிய சாலட்டையும் சமையல்கலைஞர்கள் தயார் செய்திருந்தனர்.

இந்தச் சாதனை முயற்சியைக் காணவும், உணவை ருசிபார்க்கவும் அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர்.

விரும்பியவர்களுக்கு, சமைக்கப்பட்ட பார்பிக்யூ இறைச்சி, தட்டு சுமார் 5 டாலர்கள் என்ற விலையில் விற்கப்பட்டது.

Next Story