வாழ்க்கையை மாற்றிய அண்டார்டிக்கா அனுபவம்!


வாழ்க்கையை மாற்றிய அண்டார்டிக்கா அனுபவம்!
x
தினத்தந்தி 29 Dec 2017 11:30 PM GMT (Updated: 29 Dec 2017 9:45 AM GMT)

கல்லூரியில் படிக்கும்போதே மல்லிகா தனது எதிர்கால பயணங்களுக்கான பணத்தைச் சம்பாதிக்கவும் சேமிக்கவும் தொடங்கிவிட்டார்.

ளம்பெண் மல்லிகா ஆர்யாவுக்கு பயணம் செய்வதில் மிகவும் விருப்பம். ஆனால் கல்லூரி முடிக்கும் வரை இவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் இன்று இவர், உலகின் கடைக்கோடியான அண்டார்டிக்காவுக்கே சென்றுவிட்டார்.

“நான் விரும்பும் இடத்துக்குச் செல்லும் வகையில் எனது பெற்றோர் எனக்குச் சுதந்திரம் கொடுத்திருந்தனர், என் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் போட்ட ஒரே கண்டிஷன், எனது பயணத்துக்கான பணத்தை நானே திரட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான்” என்று புன்னகையோடு சொல்கிறார் மல்லிகா.

பெற்றோர் இப்படிக் கூறிவிட்டதால், கல்லூரியில் படிக்கும்போதே மல்லிகா தனது எதிர்கால பயணங்களுக்கான பணத்தைச் சம்பாதிக்கவும் சேமிக்க வும் தொடங்கிவிட்டார்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும், பயண ஆர்வத்தின் காரணமாகவே தனது பணி தொலைதூர இடத்தில் அமைந்திருக்குமாறு பார்த்துக்கொண்டிருக்கிறார் இவர்.

“மனாலி அருகே உள்ள மலைக்கிராமத்தில் நான் ஆசிரியையாகப் பணிபுரிந்தேன். அப்போதெல்லாம் மலை, அப்பகுதி மக்கள் என்று பொழுது கழியும். பின் சில மாதங்கள் தென்னிந்தியாவில் சுற்றிவந்தேன். கிழக்குக் கடற்கரையோரமும், மேற்குக் கடற்கரை யோரமும் பஸ், ரெயில் என்று பயணித்தேன்” என்கிறார் இந்த பயணப் பறவை.

அப்படி ஒரு பயணத்தின்போதுதான் மல்லிகா அண்டார்டிக்கா பயணம் பற்றிக் கேள்விப்பட்டாராம். அதுமுதலே இவரது கனவெல்லாம் அந்தப் பனிக்கண்டம்தான்.

ஒருகட்டத்தில், அண்டார்டிக்கா, ஆர்ட்டிக் கண்டங்களை முதன்முதலாக நடந்து அடைந்த ராபர்ட் ஸ்வானுக்கு கடிதம் எழுதி பதிலும் பெற்றுவிட்டார். மல்லிகாவுக்கான பயணத் திட்டம் தயாராகிவிட்டது. அந்நிலையில், மிகப் பெரிய தடைக்கல்லாக இருந்தது, பணம்தான்.

“நான் எனது பெற்றோர் எனக்குப் பணம் கொடுத்து உதவுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே நான் மக்களை நாடுவது என்று முடிவு செய்தேன். நிதியுதவிக்கு வேண்டுகோள் விடுத்து, பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை இட்டேன். அதன்பிறகு எல்லாம் தானாக நடக்க ஆரம்பித்தன. குடும்ப உறவினர்கள், சமூக வலைதள நண்பர்களுடன், வெளியாட்களும் தாராளமாக உதவி செய்யத் தொடங்கினர். நிறுவனம் ஒன்றும் எனக்குக் கைகொடுத்தது. இப்படியாக 70 சதவீதம் பணம் திரண்டுவிட்ட நிலையில், அதற்கப்புறம்தான் மீதமுள்ள பணத்தை எனது பெற்றோர் கொடுத்தனர்” என்கிறார். முன்பின் தெரியாதவர்களும் தனக்கு நிதியுதவி செய்தது தன்னை நெகிழச் செய்துவிட்டது என்று உருகும் குரலில் கூறு கிறார் மல்லிகா.

சரி, அண்டார்டிக்கா எப்படி இருந்தது என்று கேட்டால்...

“அண்டார்டிக்கா ரொம்ப ரொம்பத் தூய்மையாக இருக் கிறது. உலகின் மிகச் சிறந்த காமிராவால் கூட அதன் அழகை முழுமையாகப் பதிவு செய்துவிட முடியாது. அக்கண்டம் நம்மை நிரந்தரமாக மாற்றிவிடும்” என்று உணர்ந்து சொல்கிறார். அதன்படி, சுற்றுச்சூழலுக்குச் சிறிதும் பாதிப்பில்லாத வாழ்க்கையை மல்லிகா வாழத் தொடங்கியிருக்கிறார். பிறரையும் அவ்வழி நடக்கச் செய்கிறார்.

உதாரணமாக, ‘நோ ஸ்டிராஸ் அட்டாச்டு’ என்றொரு திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். அத்திட்டத்தில், ‘ஸ்டிரா’ எனப் படும் உறிஞ்சு குழல்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஓட்டல்கள், கடை கடையாக ஏறிச் சொல்கிறார்.

“உலகம் முழுக்க கடற்கரைகளைச் சுத்தம் செய்யும்போது அதிகம் கிடைக்கும் பொருட் களில் ஒன்று, ‘ஸ்டிரா’. ஆக, நாம் சாதாரணமாக குளிர்பானங்களை உறிஞ்சிவிட்டுத் தூக்கியெறியும் பொருளான ஸ்டிரா, இந்தப் பூமிக்கு எவ்வளவு தீங்கைச் செய்கிறது என்பது கொஞ்சம் யோசித்தால் புரியும்” என்று பூமி மீது மிகுந்த அக்கறையுடன் கூறுகிறார் மல்லிகா.

தற்போது ஆஸ்திரேலியா சிட்னி பல் கலைக்கழகத்தில், பூமிக்குப் பாதிப்பில்லாத நிலைத்த வளர்ச்சி குறித்த முதுநிலைப் பட்டப் படிப்பை மல்லிகா ஆர்யா பயின்றுவருகிறார்.

பூமிக்காகப் போராட இன்னொரு போராளி தயார்! 

Next Story