குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்க பருத்தி செடிகளுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள்


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்க பருத்தி செடிகளுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள்
x
தினத்தந்தி 29 Dec 2017 11:00 PM GMT (Updated: 29 Dec 2017 8:20 PM GMT)

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்க காளிக்கவுண்டனூர் கிராமத்தில் இருந்து பருத்தி செடிகளுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து விவசாயிகள் புகார் அளித்தனர்.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் செந்தமிழ்செல்வன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணிக்குமார் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் பேசுகையில், ‘‘மேட்டூர் அணையில் இருந்து சேலம், ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என போராடி வருகிறோம். ஆனால், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவராக உள்ள பி.ஆர்.பாண்டியன் சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் நடந்த கூட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்க செயல். பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதை நிறுத்தி கொள்ள வேண்டும்‘‘ என்றார்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற விவசாயிகளும் அவரது பேச்சை கைதட்டி வரவேற்றனர்.

புளியங்குறிச்சியை சேர்ந்த விவசாயி பெருமாள் பேசும்போது, இயற்கை முறையில் விளைவிக்கும் நெல்லுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை நஷ்டம்தான் ஏற்படுகிறது. இது நீடித்தால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைதான் ஏற்படும். எனவே, இயற்கை விவசாயத்திற்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், என்றார். அப்போது அவர், ஒரு பையில் கொண்டு வந்த ரசாயன முறையில் விளைந்த நெல்களை கலெக்டர் ரோகிணி முன்பு அரங்கில் கொட்டினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டம் நடந்து கொண்டிந்தபோது, காடையாம்பட்டி அருகே உள்ள காளிக்கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண், பெண் விவசாயிகள் சிலர் கையில் பருத்தி செடியுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர் சில விவசாயிகள் மட்டும் கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் மாணிக்கம், தர்மலிங்கம், செங்கோடன் ஆகியோர் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தில் பிரதான விவசாயமே பருத்திதான். ராசி பருத்தி விதைகளை பொம்மிடியில் உள்ள ஏஜெண்டுகள் எங்களுக்கு விற்பனை செய்தார்கள். அந்த விதையை பயிரிட்டால் அமோகமாக விளைச்சல் கிடைக்கும் என்றார்கள். நாங்கள் பயிரிட்டோம். ஆனால், சரியான விளைச்சல் இல்லை. தரம் குறைந்த விதைகளை தந்து விட்டனர். ஏக்கருக்கு 5 முதல் 10 குவிண்டால்வரை விளையும் என்றார்கள். ஆனால், வெறும் 50 கிலோதான் உற்பத்தி ஆனது. தரம் குறைந்த பருத்தி விதையால் மகசூல் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே, வினியோகம் செய்த கடை உரிமையாளர்களிடம் இருந்து நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும்‘‘ என்றனர்.


Next Story