சம்பா பயிரை காக்க கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி


சம்பா பயிரை காக்க கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 29 Dec 2017 11:30 PM GMT (Updated: 29 Dec 2017 8:30 PM GMT)

சம்பா பயிரை காக்க கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். சம்பா நெற்பயிரை காக்க கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாரன் தலைமையில் மாவட்ட செயலாளர் கண்ணப்பன் உள்ளிட்ட 15–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை சோதனை செய்த பின்னரே போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் அலுவலக வளாகத்தில் திடீரென கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து மண்எண்ணெய் நிரப்பப்பட்ட 8 பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கயிறுகளை விவசாயிகள் ஆளுக்கு ஒன்றாக எடுத்தனர். திடீரென தங்கள் மீது மண்எண்ணெயை ஊற்ற முயன்றனர்.

இதைப்பார்த்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்து மண்எண்ணெய் பாட்டில்களையும், கயிற்றையும் பறிமுதல் செய்தனர். ஆனால் கண்ணப்பன் மட்டும் மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றினார். அவரை போலீசார் பிடிக்க சென்றபோது மண்எண்ணெயை மேல்நோக்கி ஊற்றினார். இதனால் சில போலீசாரின் மீதும் மண்எண்ணெய் பட்டது.

இதை பொருட்படுத்தாமல் கண்ணப்பனை போலீசார் துரத்தி பிடித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அவரது வாயில் மண்எண்ணெய் பட்டதால் அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்த மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர், தஞ்சை மாவட்டத்திற்கு இதுவரை பயிர்க்காப்பீடு தொகையாக ரூ.231 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்று(நேற்று) கூடுதலாக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாமல் விவசாயிகள் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர்.


Next Story