பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம்


பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 29 Dec 2017 11:03 PM GMT (Updated: 29 Dec 2017 11:03 PM GMT)

கன்னடத்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததாக எழுந்த புகாரை அடுத்து பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பெங்களூரு,

முதல்–மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் துமகூரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். சிரா நகரில் நடைபெற்ற அரசு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சித்தராமையா கலந்து கொண்டார். விழாவின் தொடக்கத்தில் கன்னடத்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது முதல்–மந்திரி உள்பட மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

அப்போது மேடையில் முன்வரிசையில் நின்று இருந்த பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரீத்தி கெலாட் வாயில் சுவிங்கம் மென்றபடி இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் செய்தி தொலைக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் கன்னடத்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்துவிட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.

இந்த நிலையில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரீத்தி கெலாட்டை தலைமை செயலாளர் ரத்னபிரபா பணி இடைநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார். மேலும் இதுபற்றி 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

Next Story