எய்ட்ஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் புதுவைக்கு முதலிடம்


எய்ட்ஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் புதுவைக்கு முதலிடம்
x
தினத்தந்தி 29 Dec 2017 11:04 PM GMT (Updated: 29 Dec 2017 11:04 PM GMT)

எச்.ஐ.வி. தொற்றை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிலேயே புதுவை முதலிடத்தில் உள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தகவல் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை அரசு சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியதாவது:–

மத்திய அரசு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலமாக நாடு முழுவதும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை எச்.ஐ.வி. (எய்ட்ஸ்) தொற்று கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் புதுவை மாநிலத்தில் 800 கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையில் யாருக்கும் எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை எச்.ஐ.சி. தொற்று இல்லாத மாநிலமாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் புதுச்சேரி முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவின் சராசரி எச்.ஐ.வி. தொற்று கர்ப்பிணி பெண்கள் மத்தியில் 0.28 சதவீதமாகும். ஆனால் 2014–ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது புதுச்சேரியில் 0.13 சதவீதமாக இருந்தது. அது இந்தியாவில் 10–வது இடத்தை பிடித்து இருந்தது.

இதேபோல் எச்.ஐ.வி. தொற்று உயர் ஆபத்து குழுவை சேர்ந்த 500 ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் 750 பெண் பாலியல் தொழிலாளர்கள் மத்தியலும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஓரின சேர்க்கையாளர் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று மிக குறைந்த விகிதமாக 0.2 என்ற நிலையில் இந்தியாவிலேயே முதலிடத்தை புதுச்சேரி பெற்றுள்ளது. தற்போது இந்தியாவின் சராசரி விகிதம் 2.69 ஆக உள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது இதேபிரிவில் இந்திய அளவில் புதுச்சேரி 4–வது இடத்தில் இருந்தது.

பெண் பாலியல் தொழிலாளர் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 0.27 என்ற அளவில் கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவில் 8–வது இடம் ஆகும். தற்போது இந்த பிரிவில் இந்தியாவின் சராசரி விகிதம் 1.56ஆக உள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு பெண் பாலியல் தொழிலாளர்கள் பிரிவில் புதுவை 16–வது இடத்தை பிடித்து இருந்தது.

புதுவையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் எச்.ஐ.வி. முதல் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. அதில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்தால் மேலும் 2 பரிசோதனைகளை செய்வதற்கு புதுவையில் 4 பிராந்தியங்களிலும் 12 நிர்ணயிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் உள்ள ஏ.ஆர்.டி. மையங்களில் இலவசமாக மாதம் ஒரு முறை சிகிச்சை அளிக்கப்பட்டு தரமான மருந்துகள் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் 615 பேரும், மற்ற மாநிலத்தை சேர்ந்த 569 பேரும் இலவச சிகிச்சை பெறுகின்றனர். புதுவை அரசு 540 எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக 59 வயது வரை ரூ.1,500, 60 முதல் 79 வயது வரை ரூ.2 ஆயிரம், 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.3 ஆயிரம் என வழங்கி வருகிறது. புதுவையில் தற்போது எச்.ஐ.வி. குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் நல்ல தரமான மருந்து வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட அதிகாரி ஜெயந்தி உடனிருந்தார்.


Next Story