கடலையே கலங்கடிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்


கடலையே கலங்கடிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
x
தினத்தந்தி 30 Dec 2017 7:21 AM GMT (Updated: 30 Dec 2017 7:21 AM GMT)

பிளாஸ்டிக் கழிவுகள் கடலையும் கலங்கடித்துக்கொண்டிருக்கின்றன.

பூமியின் பெரும் பாகத்தைச் சூழ்ந்திருக்கும் பிரம்மாண்ட நீர்ப்பரப்பு, கடல். ஆனால் மனிதனின் அறிவற்ற செயல்பாடுகளால் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலையும் கலங்கடித்துக்கொண்டிருக்கின்றன.

அதிகரித்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வாழ்வு சீர்படுத்தமுடியாத அளவுக்குச் சேதத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா. சபையின் பெருங்கடல்களுக்கான பிரிவின் தலைவர் லிசா ஸ்வென்சன் அபாய விளக்கை ஒளிரவிடுகிறார்.

அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டை நிறுத்த விரைவாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அவர், “இது பூமிப்பந்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி. நம் வசதிக்காக பிளாஸ்டிக்கை கண்டுபிடித்த சில பத்தாண்டுகளிலேயே அதன் மூலம் கடலின் சுற்றுச்சூழலை நாம் அழிக்கத் தொடங்கிவிட்டோம்” என் கிறார்.

நைரோபியில் நடக்கும் ஐ.நா. சுற்றுச்சூழல் உச்சிமாநாட்டுக்கு முன் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடலில் பிளாஸ்டிக் கழிவுகளால் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது என்று கூறும் ஸ்வென்சன், கடல்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நீக்க வலியுறுத்தி நார்வே நாடு இயற்றியுள்ள ஒரு தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.

அனைத்து நாடுகளும் அந்த நீண்டகால இலக்குடன் உடன்பட்டால் அது ஐ.நா.வின் வெற்றியாகக் கருதப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடலில் கழிவுகளைத் தடுக்க ஒரு கால அட்டவணை இல்லாதது பெரும் தோல்விக்கு வித்திடுவதாக சில சுற்றுச்சூழல் வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.

கிரீன்பீஸ் அமைப்பை சேர்ந்த டிஷா பிரவுன், “பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நம்மை இந்நிலைக்கு இட்டுச்சென்றுள்ள நமது நுகர்வு முறைகளைச் சரிபார்க்க வேண்டும்” என் கிறார்.

சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய பிளாஸ்டிக் மாசுபாட்டை ஏற்படுத்தும் நாடான இந்தோனேசியா 2025-ல் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை 75 சதவீதம் குறைக்க உறுதியளித்துள்ளது. ஆனால், இதைச் செய்ய அந்நாட்டுச் சட்ட விதிகள் போதுமானதாக இருக்கிறதா எனச் சில நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

அதிகளவிலான மீன்பிடிப்பு, ரசாயன மாசுபாடு, கழிவுநீர் கலப்பு, கடலோரப் பகுதிகளின் வளர்ச்சி, பருவநிலை மாற்றம், கடல் அமிலம் மற்றும் அதிக சுரண்டலுக்கு உள்ளாகும் பவளப் பாறைகள் போன்ற பல்முனை தாக்குதல்களை கடல் எதிர்கொள்வதாக ஸ்வென்சன் கூறுகிறார்.

சட்டங்கள், ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், அனைத்து கடலோர நாட்டு அரசுகளும், அவற்றின் குடிமக்களும் வரைமுறையின்றி கடலில் கழிவுகளைக் குவித்து வருகின்றனர். கடலில் குவியும் பிளாஸ்டிக், வேதிக்கழிவு களால் மீன் உணவுகள் கூட அபாயகரமானவையாக மாறிவருகின்றன என்று சுற்றுச்சூழல் நிபுணர்களால் எச்சரிக்கப்படுகிறது.

ஆனால், பூமியை எந்நேரமும் தாலாட்டிக்கொண்டிருக்கும், பூமியின் பருவங்களுக்கு ஆதாரமாக இருக்கும் கடலைக் களங்கப்படுத்துவதை நாம் நிறுத்தவில்லை.

அதன் அறிகுறிகள் தற்போது வெளிப்படத் தொடங்கி யிருக்கின்றன. இந்த விஷயம் கைமீறிப் போவதற்குள் எல்லோரும் விழித்துக்கொண்டால் நல்லது! 

Next Story