60 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள மள்ளப்புரம் – மயிலாடும்பாறை மலைச்சாலையை சீரமைக்க கோரிக்கை


60 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள மள்ளப்புரம் – மயிலாடும்பாறை மலைச்சாலையை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 30 Dec 2017 9:45 PM GMT (Updated: 30 Dec 2017 6:27 PM GMT)

60 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள மள்ளப்புரம்–மயிலாடும்பாறை மலைச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலம்பட்டி,

 60 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள மள்ளப்புரம்–மயிலாடும்பாறை மலைச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அனுமதி வழங்க மறுப்பு சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் எழுமலை அருகே உள்ளது மள்ளப்புரம்–மயிலாடும்பாறை வரையிலான மலைச்சாலை. இந்த சாலை சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தையும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தையும் இணைக்கும் வகையில் போடப்பட்டது. அதில் 7 கிலோ மீட்டர் து£ரம் மலைச்சாலை அமைந்துள்ளது.

 இந்தசாலை வழியாக எழுமலை பகுதி மக்கள் மயிலாடும்பாறை, வருசநாடு, கடமலைக்குண்டு உப்புதுரை, முத்தலாம்பாறை உள்பட பல்வேறு கிராமங்களுக்கு எளிதாக சென்றுவந்தனர். இந்த சாலை அமைக்கப்பட்டவுடன், இது அரியவகை அணில்கள் வாழும் பகுதி எனக்கூறி தார்சாலை அமைக்கவும், அகலப்படுத்தவும் தொடர்ந்து வனத்துறை முட்டுக்கட்டை போட்டு வந்தது. மேலும் மலைச்சாலையின் 4–வது கிலோமீட்டரில் உள்ள எஸ் வளைவு மிகவும் குறுகலாகவும் போக்குவரத்திற்கு இடையூராகவும் உள்ளது. வனத்துறை சாலையை அகலப்படுத்த அனுமதி வழங்க மறுத்து வருவதால் இந்த மலைச்சாலையில் பஸ், லாரிகள் சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது. சாலையை அகலப்படுத்த வனத்துறை தொடர்ந்து அனுமதிவழங்க மறுத்து வருவதால் 60 ஆண்டுகாலமாக போக்குவரத்து தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் தான் தற்போது இந்த சாலையில் சென்று வருகின்றனர்.

மலைச்சாலை போக்குவரத்து தொடங்கப்பட்டால் சேடபட்டி, பேரையூர், எழுமலை பகுதி மக்கள் வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய பகுதிக்கு சென்றுவர காலவிரையம் தடுக்கப்படுவதுடன் போக்குவரத்து செலவும் மிச்சமாகும். மேலும் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்வதற்கும், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருவதற்கும் எளிதாக இருப்பதோடு, ஆண்டிபட்டி வழியாக சுமார் 60 கிலோ மீட்டர் து£ரம் சுற்றிவரவேண்டிய நிலை இருக்காது.

 மள்ளப்புரம்–மயிலாடும்பாறை சாலை பல வருடங்களாக சீரமைக்கப்படாததால், சாலையில் ஆங்காங்கே பெரிய அளவிற்கு பள்ளம் ஏற்பட்டும், பல இடங்களில் சாலை முற்றிலுமாக பெயர்ந்தும், குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படாத நிலையில் உள்ளது. ஒரு சில இடங்களில் சாலையில் துண்டிப்பு ஏற்பட்டு வாகனங்கள் சென்றுவர லாயக்கற்று உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மலைச்சாலையை சீரமைத்து, குறுகலான இடங்களை அகலப்படுத்தி போக்குவரத்து ஏற்படுத்தி தர அரசு முன்வரவேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து 60 ஆண்டுகளாக இந்தப் பகுதி மக்கள் வைத்துவரும் கோரிக்கையின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா, இந்த அவலநிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முற்றுப்புள்ளி வைப்பார்களா என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்புடன் உள்ளனர்.


Next Story