2018–ல் மாற்றம் வரும் என கவர்னர் எதிர்க்கட்சி தலைவர் போல் பேசுகிறார் முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு


2018–ல் மாற்றம் வரும் என கவர்னர் எதிர்க்கட்சி தலைவர் போல் பேசுகிறார் முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Dec 2017 11:15 PM GMT (Updated: 30 Dec 2017 7:50 PM GMT)

2018–ல் மாற்றம் வரும் என கவர்னர் எதிர்க்கட்சி தலைவர்போல் பேசுகிறார் என நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில நிர்வாகியான கவர்னர் கிரண்பெடியின் அறிக்கைகள், நடவடிக்கைகள் அனைத்தும் மாநில அரசுக்கு எதிராகவும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதத்திலும உள்ளது. புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தான் உள்ளது. ஜனாதிபதி ஆட்சி இல்லை. அரசின் செயல்பாடுகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிட மாநில நிர்வாகிக்கு அதிகாரம் இல்லை.

ஆனால் அவர் தனக்குத்தான் முழு அதிகாரம் இருப்பதாக கருதி அரசின் அன்றாட செயல்களில் தலையிட்டு வருகிறார். புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் காவல், பொதுப்பணி, உள்ளாட்சி, வருவாய் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

காவல்துறை தலைவரை அழைத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும்படியும் ஆணையிட்டுள்ளேன். இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி போலீஸ் அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்டுள்ளார். அவர் போட்டி அரசு நடத்துகிறாரா?

கிரண்பெடி மாநில நிர்வாகியாக பொறுப்பேற்று 1½ ஆண்டுகள் ஆகிறது. அவர் இதுவரை மாநில வளர்ச்சிக்கு செய்த பங்கு என்ன? அரசை குறைகூறுவதும், அதிகாரிகளை அழைத்து பேசுவதும்தான். உச்சநீதிமன்றமும் மாநில நிர்வாகிக்கு அரசின் அன்றாட பணிகளில் தலையிட அதிகாரமில்லை என விளக்கம் அளித்துள்ளது. எனவே மாநில நிர்வாகியின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

2018–ல் அதிகார மாற்றம் வரும் என எதிர்கட்சி தலைவரைப்போல் கவர்னர் கிரண்பெடி பேசுகிறார். இதனால் அவர் சமூக ஆர்வலரா? எதிர்க்கட்சி தலைவரா? என்ற கேள்வி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மாநில நிர்வாகி தன்னை உணர்ந்து கடமையை செய்ய வேண்டும். அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்கக்கோரிய வி‌ஷயத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கின் முக்கிய சாராம்சமே 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தான்?.

சம்பளம் வழங்கக்கோரி அதிகாரி அனுப்பிய கடிதத்திற்கு சபாநாயகர் வைத்திலிங்கம் விளக்கமாக பதில் அளித்துள்ளார். இனி ஐகோர்ட்டு தான் முடிவு செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story