குட்டை மரக் கலை - ஆயிரம் சதுர அடி வளரும் மரம் அரை அடி தொட்டியில்!


குட்டை மரக் கலை - ஆயிரம் சதுர அடி வளரும் மரம் அரை அடி தொட்டியில்!
x
தினத்தந்தி 31 Dec 2017 6:25 AM GMT (Updated: 31 Dec 2017 6:24 AM GMT)

‘போன்சாய்’ என்ற குட்டை மர வளர்ப்புக் கலையை கண்டறிந்தவர்கள், சீனர்கள். ஆனால் உலக அளவில் போன்சாய் மரம் வளர்ப்பில் முன்னணியில் இருப்பவர்கள், ஜப்பானியர்கள்.

‘போன்சாய்’ என்ற குட்டை மர வளர்ப்புக் கலையை கண்டறிந்தவர்கள், சீனர்கள். ஆனால் உலக அளவில் போன்சாய் மரம் வளர்ப்பில் முன்னணியில் இருப்பவர்கள், ஜப்பானியர்கள்.

போன்சாய் என்ற குட்டை மர வளர்ப்புக் கலை உருவானதற்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. பழங்காலத்தில் சீனர்கள் மருத்துவ சிகிச்சையில் ஏராளமான மூலிகை செடிகளை பயன்படுத்தினார்கள். மூலிகைகளை புத்தம் புதிதாக பயன் படுத்தி மருந்துகள் தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருமுறையும் மலைப்பகுதிக்கு சென்று மூலிகைகளை பறித்து வந்து பயன்படுத்தினார்கள். இதில் அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. ஒரு முறை மலைக்கு சென்று மூலிகைகளை பறித்து வர பல நாட்கள் ஆனது. அத்தகைய சிரமங்களைப் போக்க பிற்காலத்தில் அந்த மூலிகை செடிகளை வீட்டிலேயே வளர்க்க முயற்சித்தனர்.

அவர்கள் வீடுகளில் தட்டையான தொட்டிகளில் மூலிகை செடிகளை வளர்த்தபோது அவை தானாகவே குட்டையாக வளரத் தொடங்கின. செடிகள் குட்டையாக வளர்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட சீனர்கள் பிற்காலத்தில் அதற்கான காரணத்தை கண்டறிந்தனர். செடிகளை தொட்டியில் வளர்த்து அவற்றின் வேர்களை சுருக்கிவிட்டால் வயதான மரங்களை கூட சிறிய தொட்டிகளில் வளர்க்கலாம் என்பதை தெரிந்து கொண்டனர். இப்படித்தான் போன்சாய் கலை சீனர்களுக்கு வசப்பட்டதாக சொல்கிறார்கள்.

இன்னொரு கருத்தும் நிலவிவருகிறது. மரங்களில் உட்காரும் பறவைகள் அந்த மரங்களில் உள்ள பழங்களை கொட்டையோடு சேர்த்து தின்றுவிடும். அந்த கொட்டைகள் பறவைகள் எச்சமிடும்போது வெளியேறுகின்றன. பறவைகள் பாறைகள் நிறைந்த பகுதி களில் உட்காரும்போது அங்கு விழும் கொட்டைகள் பாறை இடுக்குகளில் செடிகளாக வளருகின்றன. ஆனால் அவை வளருவதற்கு போதுமான மண் அங்கு இருக்காது. அந்த இடத்தில் கையளவு மண் இருந்தால்கூட அதில் அந்த கொட்டை முளைத்து செடியாக வளரும். அவ்வாறு வளரும்போது அந்த செடிகளின் வேர்களால் பாறைகளை துளைத்துச் செல்ல முடியாது. பாறை களின் மேல் தான் அந்த வேர்கள் வளர வேண்டும். வேர்கள் ஆழமாக வளர முடியாததால் அந்த செடியும் உயரமாக வளராது. இதனால் பல ஆண்டுகளாக அந்த செடி குட்டையாகவே இருப்பதை மக்கள் பார்த்துள்ளனர். இதை அடிப்படையாகவைத்துதான் குட்டை மரம் வளர்க்கும் கலை தோன்றியதாகவும் கூறப்படுகிறது.

‘குட்டை மரம் வளர்ப்பது என்பது ஒரு அற்புதமான கலை. அதை தினமும் பராமரித்து வளர்ப்பதின் மூலம் தாவரங்களுடன் மனம் விட்டு பேசும் அளவுக்கு ஈடுபாடுகொள்ள முடிகிறது’ என்று சொல்கிறார் கோவையை சேர்ந்த பொன்னுசாமி. 76 வயதான இவர், 300-க்கும் மேற்பட்ட போன்சாய் மரங்களை தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.

போன்சாய் மரத்தை எப்படி வளர்க்கவேண்டும் என்பது பற்றி பொன்னுசாமி சொல்கிறார்:

‘நான் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அப்போது அந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை அழகுபடுத்துவதில் ஆர்வம்கொண்டு, அதற்காக சில புத்தகங்களை தேடிப்பிடித்து வாங்கிப் படித்தேன். புத்தகங்கள் மூலம்தான் எனக்கு போன்சாய் கலை அறிமுகமானது. அதன் பின்பு வெளிநாடுகளில் இருந்தும் நிறைய புத்தகங்களை வரவழைத்து படித்தேன். முழுமையாக அதை கற்றுவிட்டு, கடந்த 40 ஆண்டுகளாக போன்சாய் மரங்களை நான் வளர்த்து வருகிறேன்.

போன்சாய் மரம் வளர்ப்பிற்கான அடிப்படை தத்துவம் என்னவென்றால், ஒரு மரம் எவ்வளவு உயரமாக வளருகிறதோ அந்த அளவிற்கு பூமிக்கு கீழ் அதன் வேர்கள் ஆழமாகவும், பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வளரும். ஆனால் மரத்தின் வேர் வளரமுடியாமல் போனால் அந்த மரம் உயரமாக வளராது. பாழடைந்த கட்டிடங்கள், உயரமான கட்டிடங்களின் பக்கவாட்டு சுவர்கள், பாலத்தின் கீழ் தூண்களில் வளர்ந்துள்ள மரங்களை போன்சாய் மரம் வளர்ப்புக்காக தேடிப்பிடித்து எடுத்து வருவோம். அந்த மரங்கள் அனைத்தும் பறவைகள் எச்சமிட்ட கொட்டைகளிலிருந்து வளர்ந்தவைதான்.

புதிய செடியை சிறிய தொட்டியில் வளர்ப்பதைவிட இதுபோன்ற பழைய கட்டிடங்களில் இருந்து கொண்டுவரும் செடிகளை எளிதாக போன்சாய் வளர்ப்புக்காக பயன்படுத்தலாம். ஏனென்றால் ஏற்கனவே அந்த மரத்தின் வேர் குறுகி போன்சாய் வளர்ப்புக்கு ஏற்றவாறு மாறியிருக்கும்.

தென்னை மற்றும் பனை மரங்களை தவிர மற்ற மரங்கள் அனைத்தையும் போன்சாய் வளர்ப்புக்கு பயன்படுத்தலாம். தொட்டியில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு உரம், ஒரு பங்கு மணல் ஆகியவற்றை போட்டு அதில் நர்சரியில் இருந்து வாங்கப்பட்ட செடியை வளர்க்கலாம். சாதாரணமாக செடியை வளர்ப்பது போன்று அந்த செடிக்கு தினசரி தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.

போன்சாய் மரங்களை பல்வேறு ஸ்டைல்களில் நம் விருப்பத்திற்கேற்ப வளர்க்கலாம். இயற்கையாக மரங்கள் கூம்பு போன்ற வடிவில் தான் வளரும். உதாரணத்துக்கு ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம் கொண்ட தொட்டியில் ஆலச் செடியை வளர்க்கும்போது அதன் வேர் ஆழமாக செல்ல முடியாது. தொட்டியை விட்டு வேர் வெளியே செல்ல முடியாது என்பதால் வேரின் வளர்ச்சி முடக்கப்படும். இதனால் வேருக்கு மேல் உள்ள தண்டு பகுதியும் உயரமாக வளராது. அந்த செடியின் இலைகளை வெட்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்த செடியின் கிளைகளை வயரிங் மூலம் வளைத்து வளர்க்க வேண்டும்.

மிருதுவாக்கப்பட்ட அலுமினிய கம்பியை உள்ளே வைத்து செய்யப்பட்ட பிரத்யேக வயரை கொண்டு செடியின் கிளையை நமது விருப்பத்திற்கேற்றவாறு வளைத்து செடியை வளர்க்கலாம். இதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ள கத்திரியினால் செடியின் தண்டு, கிளை, இலையை தேவைப்படும் அளவிற்கு வெட்டிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இதில் பல்வேறு நுணுக்கங்கள் உள்ளன. தாவரங்களின் மீது ஆர்வம் உள்ளவர்கள் தான் இதில் கவனமாக ஆர்வத்துடன் செயல்பட்டு குட்டை மரங்களை வளர்க்க முடியும்.

சாதாரண தாவரங்களை போன்று போன்சாய் மரங்களையும் தினமும் சூரிய ஒளியில் வைக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தொட்டியிலிருந்து செடியை வேரோடு எடுத்து, தேவையில்லாத வேர்களை வெட்டி எடுத்துவிட்டு மீண்டும் தொட்டியிலேயே வைத்து விட வேண்டும். கத்திரிக்கோல் போன்ற அனைத்து கருவிகளும் இதற்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளன. அவைகளைதான் பயன்படுத்த வேண்டும். இவை சற்று அதிகம் விலைகொண்டவை.

போன்சாய் மரங்கள் அனைத்தும் மற்ற மரங்களை போன்று பூக்கள் பூத்து காய் காய்த்து கனி தருபவை. அவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. சாதாரண மரம் காய்ப்பது போன்றே போன்சாய் மரங்களும் காய்க்கும். தோட்டம் போன்றும் நிறைய போன்சாய் மரங்களை வளர்க்கலாம்.

பெரிய ஆலமரம் ஒன்று ஆயிரம் சதுர அடி பரப்பளவிலும் வளரும் திறன் கொண்டது. அந்த பிரமாண்டத்தை அரை அடி தொட்டிக்குள் அடக்கிவிட முடியும். 100 வயதான மரங்களைகூட ஒரு சதுர அடி பரப்பளவு கொண்ட தொட்டியில் வளர்க்கும் அபூர்வ கலையான போன்சாய் மரம் வளர்ப்பிற்கு தாவரங்களை பற்றிய தெளிவான அறிவு தேவை. மரம் வளர்ப்பது மனதுக்கு அமைதியை தரும். அதனால் ஆரோக்கியமும், நிம்மதியும் கிடைக்கும்.

ஆல், அரசு, இச்சி, எலுமிச்சை, சவுக்கு, புளிய மரம் உள்பட அனைத்து விதமான மரங்களையும் போன்சாயில் வளர்க்கலாம். என்னிடம் 90 ஆண்டுகளை கடந்த குட்டை மரங்களும் உள்ளன. போன்சாய் மரம் வளர்ப்பு கலையை மற்றவர்களும் தெரிந்து கொள்வதற்காக பயிற்சி மையம் கோவையில் தொடங்க உள்ளேன்’ என்றார்.

பொன்னுசாமி திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர். சர்வதேச போன்சாய் மரம் வளர்ப்போர் சங்கம் இவரை ஆலோசகராக அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தை பெற்ற ஒரே இந்தியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. போன்சாய் கலைக்காக பொன்னுசாமி ஜப்பான் ஏர்லைன்ஸ் விருது உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். மும்பையை சேர்ந்த நிகுஞ், ஜோதி தம்பதியர் இந்த கலையில் இவருக்கு குருவாக விளங்குகிறார்கள். இயற்கையை வணங்கும் ஜப்பானியர்களும், சீனர்களும் போன்சாய் மரம் வளர்ப்பை தங்கள் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாக கருதுகிறார்கள்.

Next Story