ரெயில் ஓட்டும் அனுபவம்


ரெயில் ஓட்டும் அனுபவம்
x
தினத்தந்தி 31 Dec 2017 7:08 AM GMT (Updated: 31 Dec 2017 7:08 AM GMT)

ஆசியாவின் முதல் பெண் ரெயில் டிரைவர் என்ற சிறப்பை பெற்றவர், சுரேகா யாதவ். ஆண்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலகட்டத்தில் தனியொரு பெண்மணியாக தன்னுடைய திறமையை நிரூபிக்க பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டிருக்கிறார்.

சியாவின் முதல் பெண் ரெயில் டிரைவர் என்ற சிறப்பை பெற்றவர், சுரேகா யாதவ். ஆண்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலகட்டத்தில் தனியொரு பெண்மணியாக தன்னுடைய திறமையை நிரூபிக்க பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டிருக்கிறார். சரக்கு ரெயில், மகளிர் மின்சார ரெயில்களை இயக்கி படிப்படியாக முழுநேர ரெயில் டிரைவர் அந்தஸ்தை பெறுவதற்கு போராடியிருக்கிறார். சுரேகா, மகாராஷ்டிரா மாநிலம் சாதரா மாவட்டத்தை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு படித்து டிப்ளமோ எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் முடித்திருக்கிறார்.

‘‘குடும்ப சூழ்நிலையால் படிப்பை முடித்தவுடன் வேலைக்கு போகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது இந்திய ரெயில்வேயில் உதவி டிரைவர் பணியிடம் காலியாக இருப்பது பற்றிய அறிவிப்பு வெளியானது. அதில் டிப்ளமோ படிப்பு விண்ணப்பிக்க தகுதியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் விண்ணப்பித்தேன். தேர்வும் எழுதினேன். ஆனால் நான் ரெயில்வே துறைக்குள் நுழைவேன் என்று எதிர்பார்க்கவில்லை. திடீரென்று ரெயில்வே துறையிடம் இருந்து அழைப்பு வந்தது’’ என்கிறார்.

சுரேகா 1986-ம் ஆண்டு உதவி டிரைவர் பயிற்சி பெற தொடங்கி இருக்கிறார். தீவிர பயிற்சிக்கு பிறகு 1989-ம் ஆண்டு ரெயில் உதவி டிரைவர் பணியை தொடங்கினார். முதன்முதலாக சரக்கு ரெயிலை ஓட்டினார். வாடி பந்தருக்கும், கல்யாணுக்கும் இடையே அந்த ரெயிலை இயக்கினார். ரெயில் எஞ்சின், சிக்னலை பரிசோதிப்பது தொடர்பான பணிகளையும் செய்தார். 1998-ம் ஆண்டு முழு நேர சரக்கு ரெயிலின் டிரைவராக பணிநியமனம் செய்யப்பட்டார். 2000-ம் ஆண்டு ரெயில்வே மந்திரியாக இருந்த மம்தா பானர்ஜி மகளிர் சிறப்பு மின்சார ரெயிலை அறிமுகப்படுத்தினார். அந்த ரெயிலை ஓட்டிய முதல் பெண்மணி என்ற சிறப்பையும் சுரேகா பெற்றார். 2011-ம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பாதையில் ெரயில் இயக்குவதற்கும் சிறப்பு பயிற்சி பெற்றார். அங்கு மலைப்பாதையின் ஏற்ற இறக்கங்களில் சுமுகமாக பயணம் தொடர்வதற்கு ஏதுவாக இரண்டு எஞ்சின்களை கொண்ட பயணிகள் ெரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த மலைப்பாதையில் ரெயில் ஓட்டுவதற்கும் சிறப்பு பயிற்சி பெற்று தேர்ந்தார். எக்ஸ்பிரஸ் ரெயிலை ஓட்டும் தகுதியையும் பெற்றார். 2011-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று புனேயில் இருந்து மும்பைக்கு ரெயிலை இயக்கினார். அதில் கடினமான வழித்தடங்களில் சாமர்த்தியமாக ரெயிலை ஓட்டியதன் மூலம் ரெயில்வே டிரைவருக்கான முழு தகுதியையும் சுரேகா பெற்றுவிட்டார். எனினும் நீண்டதூர ரெயில்களை இயக்க வேண்டும் என்பது சுரேகாவின் விருப்பமாக இருக்கிறது. அதற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். ரெயில்வேயில் பெண் டிரைவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கும் உந்து சக்தியாக விளங்கி வருகிறார்.

‘‘என்னால் முடியும் என்பதால், எல்லா பெண்களாலும் முடியும்’’ என்று பெண்களுக்கு தன்னம்பிக்கையூட்டுகிறார், சுரேகா.

Next Story