தாய்மொழிக் கல்வி கட்டாயம் வேண்டும்


தாய்மொழிக் கல்வி கட்டாயம் வேண்டும்
x
தினத்தந்தி 20 Jan 2018 11:45 AM IST (Updated: 20 Jan 2018 11:43 AM IST)
t-max-icont-min-icon

உலகெங்கும் உள்ள வளர்ந்த இன மக்களை மேலோட்டமாகப் பார்த்தால் கூட அவரவர் தம் தாய்மொழிகளைத் தம் பேச்சிலும், எழுத்திலும், கல்வி பயிற்றுவித்தலிலும், ஆட்சி நடத்துதலிலும் கோவில் வழிபாட்டிலும் விடாமல் பின்பற்றி வருகின்றனர். ஐரோப்பியர் இதற்கு மிகச் சரியான சான்று.

ஐரோப்பா கண்டம் முழுவதும் ஏறத்தாழ 27 நாடுகள் இருந்தபோதிலும், அவை பெரும்பாலும் சிறிய நாடாக இருந்தபோதிலும் தங்களுடைய தாய்மொழிகளிலேயே அனைத்தையும் நடத்தி வருகின்றனர். அம்மட்டுமின்றி தாய்மொழி வழி அனைத்தையும் நிகழ்த்துவதால் அவர்கள் உலகிலேயே அறிவியலிலும் பொறியியலிலும் இன்னபிற இயல்களிலும் மிக முன்னணியில் இருந்துவருகின்றனர். பல கண்டுபிடிப்புகளுக்குக் காரணம் அவர்களே.

ஐரோப்பியர்களில் பிரெஞ்சுக்காரர்கள் மிகுந்த தாய்மொழிப்பற்று உடையவர்களாகப் போற்றப்படுகிறார்கள். பிரெஞ்சுக்காரர்களுக்கு ஏனைய பகுதி மக்கள் எந்தளவிலும் தாழ்ந்தவர்கள் இல்லை. வெளிநாட்டிலிருந்து புதிய நாட்டினர் அவர்கள் நாட்டிற்கு வந்தபோதும் அவர்களை வரவேற்கவோ அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்யவோ கருத்தரங்கம் மாநாடு முதலானவற்றை நடத்தவோ அங்கங்கே மொழிபெயர்ப்பாளர்கள் அமர்த்தப்பட்டிருப்பார்கள். அவர்கள் மாநாடு நடக்கும்போது மாநாட்டில் பங்கேற்க வந்திருப்பவர்கள் காதுகளில் மொழிபெயர்ப்புக் கருவியைப் பொருத்தியிருப்பதை அனைவரும் பார்க்கமுடியும். அக்கருவியில் தங்களுக்கு வேண்டிய மொழிக்குரிய பட்டனைத் தட்டிவிட்டால் பேசப்படும் கருத்துகள் அந்தந்த மொழிகளில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்படும்.

தாங்கள் வாழும் நாடுகளில் மட்டுமின்றி, தாங்கள் செல்லுகின்ற நாடுகளிலும் தங்கள் தாய்மொழியைப் பரப்பிவிடுவதும் ஆட்சிமொழி அளவுக்கு உயர்த்தி விடுவதும் இவர்களது பழக்கம். சான்றாக, உலகெங்கும் ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும், ஸ்பெயின்காரரும், நெதர்லாந்துக்காரரும் பரவினர். சென்ற இடங்களில் எல்லாம் தங்கள் மொழியை முன்னிறுத்தி வளர்த்திருப்பார்கள். இவர்கள் அவ்வூர் மொழிகளைக் கற்பதை விட உள்ளூர் மக்களுக்குத் தத்தம் மொழியைக் கற்றுக்கொடுத்து விடுவர்.

சான்றாக, ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு வெகுதொலைவில் இருந்து ஐரோப்பியர், குறிப்பாக ஆங்கிலேயர் குடியேறினர். அங்கு ஆங்கிலத்தை ஆட்சிமொழி ஆக்கியதுடன் அங்கு பரம்பரையாக வாழ்ந்துவரும் பூர்வீகக் குடிகளுக்கும் தங்கள் மொழியைக் கற்றுக் கொடுத்து விட்டனர். அவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திற்குச் சென்றனர். ஆசியக் கண்டத்திற்குச் சென்றனர். இன்னபிற இடங்களுக்கெல்லாம் சென்றனர். சென்ற இடத்திலெல்லாம் தம் மொழியைக் கற்பித்து விட்டனர். அம்மட்டுமின்றி ஆங்கில மொழியே தம்முடைய தாய்மொழியை விட மேலானது என்று நம்பச்செய்தும் சாதனை புரிந்தனர்.

சான்றாக, இந்தியாவுக்கு இங்கிலாந்துகாரர்கள் ஆட்சி செய்ய வந்தபிறகுதான் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. பிரெஞ்சு மொழி கற்பிக்கப்பட்டது. நம்மூர் மக்கள் அம்மொழிகளைக் கற்றுக்கொண்டனர். அமெரிக்காவிற்குச் சென்றபோது புது அமெரிக்கக் கண்டம் முழுவதும் தம் தாய்மொழியான ஆங்கிலத்தைக் கற்கச் செய்தனர். இன்று அமெரிக்கா ஆட்சிமொழி ஆங்கிலமே ஆகும். உலகப் பணக்கார நாடாக இருக்கும் அமெரிக்காவிலேயே மிகச் சிறிய நாடான இங்கிலாந்தின் தாய்மொழி ஆங்கிலம் முழுமையாகக் குடியேறி விட்டது. தென்னமெரிக்காவில் ஐரோப்பாவில் இருந்து ஸ்பெயின்காரர்கள் பரவினர். அக்கண்டம் முழுதையும் கைப்பற்றி ஸ்பெயின் மொழியைத் தென்னமெரிக்க மொழி ஆக்கிவிட்டனர்.

சென்ற இடங்களில் மொழியைப் பரப்புதல் என்பது வெறும் மொழியை மட்டும் பரப்புகிறார்கள்; பரப்பிவிட்டுப் போகட்டும் என்று உள்ளூர் மக்கள் இருந்துவிட்டார்கள். அவ்வாறு இருந்துவிடக் கூடாது. மொழி என்பது பேசப்படும் ஒன்றாக மட்டும் விதைக்கப்படுவதுமில்லை; வளர்க்கப்படுவதுமில்லை. அம்மொழி வழியே மொழியைப் பேசும் மக்களின் உணவுப்பழக்கம், உடைப்பழக்கம், இன்னபிற பழக்கவழக்கங்கள் அனைத்தும் சேர்த்துப் பரப்பப்படும்.

சான்றாக, பிரெஞ்சு மொழியுடைய தொடக்க வகுப்புப் பாடப்புத்தகங்கள் பிரெஞ்சு மொழிப் பாடப்புத்தகங்கள் என்ற பெயரில் அமைக்கப்படுவதில்லை. புத்தகத்தின் தலைப்பே பிரெஞ்சுக்காரர்களின் பண்பாடு, நாகரிகம் என்ற பெயரில்தான் அப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். பல புத்தகங்களின் முகப்புப் பக்கமே குழந்தை தன் தாய்க்கு முத்தம் கொடுப்பது போல அமைக்கப்பட்டிருக்கும். அது அவர்களுடைய பண்பாடு. பாட வழியே தங்கள் பண்பாட்டையும் கற்பிப்பது அவர்களின் முறை. அப்படியே தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் இன்னபிற இடங்களிலும் ஐரோப்பியர் தம் மொழி வழிப் பண்பாட்டையும் சேர்த்துக் கற்பித்தனர். பண்பாடு என்பது வெறும் பழக்கவழக்கமாக மட்டும் நின்றுவிடுவதில்லை. அதன்வழி பெரிய அளவு பொருளாதாரமே தலைகீழாக மாற்றப்படும்.

எடுத்துக்காட்டாக, நம் ஊரில் பரவி உள்ள பிரெட், பட்டர், ஜாம், மது முதலானவை ஐரோப்பியரிடமிருந்து அப்படியே வந்தவை. அவற்றை உற்பத்தி செய்ய வேண்டிய மூலப்பொருள் நம்மூரில் கிடைக்காது. கோதுமை கிடைப்பதில்லை. ஆனால், கோதுமை வழி செய்யப்படுகின்ற உணவுக்கு நாம் பழக்கப்படுத்தப்பட்டு விட்டோம். எனவே, கோதுமையை நம்பித்தான் இருக்கவேண்டும். கோதுமை இல்லாத உணவு இனி தமிழ்நாட்டில் சாத்தியமில்லை. ஆக, மறைமுகமாக தமிழ்நாட்டில் உற்பத்தியே ஆகாத கோதுமை எங்கோ உற்பத்தி ஆகி, இங்கே இறக்குமதி ஆகிறது.

நாம் பாரம்பரியமாக வேப்பங்குச்சி, ஆலங்குச்சியில் பல் துலக்கிக் கொண்டிருந்தோம். ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்பது தமிழ்ப் பழமொழி தற்போது பெரும்பாலோர் அவற்றிற்குப் பதிலாக பற்பசையைப் பயன்படுத்துகிறோம். இப்பற்பசை முற்றும் இறக்குமதி சரக்கு என்பது வெளிப்படை. அதுபோலவே அன்றாடம் குளிக்கும்போது பல்வேறு நறுமணமுள்ள சோப்பைப் போட்டுக் குளிக்கிறோம். ஒருநாள் சோப்பில்லாமல் குளித்தாலும் குளித்தது போல் இருப்பதில்லை. இந்தச் சோப்பு முழுக்க முழுக்க வெளிநாட்டு இறக்குமதி என்பது எல்லாருக்கும் தெரியும்.

இப்படியே உடை, பழக்கவழக்கங்கள் முதலான அனைத்திலும் நாம் அயல்நாடுகளைச் சார்ந்திருக்கிறோம். மறைமுகமாக அயல்நாட்டுப் பொருள்களுக்கு நுகர்வோராக நாம் ஆக்கப்பட்டு விட்டோம்.

க.ப.அறவாணன், முன்னாள் துணை வேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

Next Story