வேலூர் மத்திய சிறையில் 2½ மணி நேரம் நீதிபதி விசாரணை


வேலூர் மத்திய சிறையில் 2½ மணி நேரம் நீதிபதி விசாரணை
x
தினத்தந்தி 2 Feb 2018 10:45 PM GMT (Updated: 2 Feb 2018 7:51 PM GMT)

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர் ஆஸ்பத்திரியில் இறந்த சம்பவம் குறித்து வேலூர் மத்திய சிறையில் நீதிபதி கனகராஜ் விசாரணை நடத்தினார்.

வேலூர்,

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம். இவர் கடந்த 21-ந் தேதி போளூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது அவரை, வசந்தம்மணி என்கிற மணிகண்டன் (வயது 41) என்பவர் தாக்கி உள்ளார். இது குறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தம் மணியை கைது செய்து 22-ந் தேதி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அங்கு 23-ந் தேதி வசந்தம்மணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து 25-ந் தேதி மீண்டும் சிறைக்கு சென்றார்.

இந்த நிலையில் 26-ந் தேதி சிறையில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி 31-ந் தேதி இறந்து விட்டார்.

வசந்தம்மணி சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவருடைய மனைவி சுமிதா மற்றும் உறவினர்கள் போளூர் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் அவர்கள் பாகாயம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அனுப்பிவிட்டனர். இதனால் மறியல் போராட்டம் நடத்தினர். வசந்தம் மணி இறந்தது குறித்து சிறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதைத்தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வேலூர் விரைவு நீதிமன்ற நீதிபதி கனகராஜ் முன்னிலையில், வசந்தம்மணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த வசந்தம்மணியின் மனைவி சுமிதா, எம்.எல்.ஏ.வை கைது செய்யும் வரை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும், உடலை வாங்க மாட்டோம் என்றும் நீதிபதியிடம் கூறினார்.

மேலும் அவர் நீதிபதி கனகராஜிடம் கொடுத்த மனுவில் “சென்னை ஐகோர்ட்டில் வழக்குத்தொடர இருக்கிறேன். கோர்ட்டு உத்தரவு வரும் வரை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது, உடலையும் வாங்க மாட்டோம். அதுவரை மருத்துவமனையில் உடலை பாதுகாப்பாக வைக்கவேண்டும்” என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து வசந்தம்மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் விரைவு நீதிமன்ற நீதிபதி கனகராஜ், நேற்று முன்தினம் வேலூர் மத்திய சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது வசந்தம் மணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும்போது எப்படி இருந்தார், அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் எந்த மாதிரியான சிகிச்சையளிக்கப்பட்டது, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினார்.

2-வது நாளாக நேற்று மீண்டும் மத்திய சிறைக்கு சென்ற நீதிபதி கனகராஜ் சிறைத்துறை அதிகாரிகள், வசந்தம்மணியுடன் இருந்த சக கைதிகள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றவர்களிடம் விசாரணை நடத்தினார். இதற்காக பகல் 12 மணிக்கு சிறைக்கு சென்றவர் சுமார் 2½ மணி நேரம் விசாரணை நடத்தி விட்டு பிற்பகல் 2.30 மணிக்கு வெளியே வந்தார். பின்னர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை நடத்தினார்.

Next Story