ரெயில்வே விரிவாக்க பணிக்காக மதுரை வீரன் கோவிலை இடிக்க முயற்சி


ரெயில்வே விரிவாக்க பணிக்காக மதுரை வீரன் கோவிலை இடிக்க முயற்சி
x
தினத்தந்தி 3 Feb 2018 4:15 AM IST (Updated: 3 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ரெயில்வே விரிவாக்க பணிக்காக மதுரை வீரன் கோவிலை இடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில்வே காலனி ஆலமரத்து தெருவில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவில் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்கள் ரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரெயில்களை சுத்தம் செய்யும் பணி செய்து வந்தனர். இவர்கள் தங்களது குலதெய்வமாக மதுரை வீரன் சாமியை வழிபட்டு வந்தனர்.

காலப்போக்கில் பல புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இவர்களுக்கு ரெயில்வேதுறையில் வேலை இல்லாமல் போனது. இதனால் வேறு இடங்களுக்கு சென்று பணியாற்றி வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வேதுறையின் விரிவாக்க பணிக்காக ரெயில்வே காலனி ஆலமரத்தெருவில் வசித்து வந்தவர்களை அங்கிருந்து அகற்றி, தஞ்சை மானோஜிப்பட்டியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கே வசித்து வருகின்றனர். நாங்கள் இங்கிருந்து சென்றாலும் எங்களது குலதெய்வமான மதுரை வீரன் கோவிலை அப்புறப்படுத்தக்கூடாது என்று ரெயில்வேதுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது கோவில் அப்புறப்படுத்தப்படாது என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது தஞ்சை- திருச்சி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தநிலையில் ரெயில்வே காலனி ஆலமரத்துதெருவில் ரெயில்வேதுறையின் சார்பில் பல்வேறு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கொண்டு வரப்பட்ட சிமெண்டு மூட்டைகள் எல்லாம் மதுரை வீரன் கோவிலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றிலும் மண்ணை நிரப்பி கோவிலை இடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி நாட்டாண்மை மணி, ஆதிதமிழர் பேரவையை சேர்ந்த மாயன், வக்கீல் இளமதி மற்றும் ஆதிதமிழர் கட்சி, ஆதிதமிழர் பேரவையினர், பெரியார் மையத்தினர் நேற்று மதுரை வீரன் கோவில் முன்பு ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலை இடித்தால் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இதையடுத்து தற்காலிகமாக கோவிலை இடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story