இந்த ஆட்சி முடிவுக்கு வந்தால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் டி.டி.வி. தினகரன் பேச்சு


இந்த ஆட்சி முடிவுக்கு வந்தால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் டி.டி.வி. தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 3 Feb 2018 5:15 AM IST (Updated: 3 Feb 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆட்சி முடிவுக்கு, வந்தால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் ,

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்ட விவசாயிகளின் துயரங்களை நன்கு உணர்ந்த ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் சென்று காவிரி நடுவர் மன்றம் அமைத்து அதன் மூலம் சட்டப் போராட்டம் நடத்தி காவிரியில் நமக்கு உரிய தண்ணீரை பெற்று தந்தார். அதன் மூலம் ஆண்டுதோறும் நமக்கு தண்ணீர் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது காவிரி டெல்டாவில் நெற்பயிர் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகிறது.

தமிழக முதல்வர் நமக்கு உரிய தன்ணீரை கேட்டு பெறாமல், கர்நாடக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுக்கொண்டு இருக்கிறார். தமிழக மக்களின் உரிமைகளை காக்க அதற்காக பாடுபட்டு ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. ஆனால் மத்திய அரசிடம் அந்த உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு மத்திய அரசின் நிழல் அரசாக இந்த தமிழக அரசு செயல் படுகிறது.

கதிராமங்கலம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சி இருந்தபோது இந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்தார். ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்தாரோ அந்த திட்டங்களை எல்லாம் மத்திய அரசிடம் பயந்து கொண்டு தற்போதைய தமிழக ஆட்சியாளர்கள் அனுமதித்துள்ளனர். எளிதாக இந்த அரசாங்கம் அனுமதித்த காரணத்தினால் மக்கள் மிகவும் வேதனையடைகிற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. விரைவில் இந்த ஆட்சி அகற்றப்பட்டு ஜெயலலிதாவின் ஆட்சி கொண்டு வரப்படும். இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூறத்தான் நான் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளேன். இந்த ஆட்சி அகற்றப்பட்ட பின் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும். அப்போதுதான் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும். அப்போது இதே ஊரில் நன்றி தெரிவிக்க நான் உங்களிடம் வருவேன்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எனக்கு கட்சியும், இரட்டை இலை சின்னமும் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட என்னை வெற்றி பெறச் செய்தனர். இதற்காக அந்த தொகுதி மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் என்றைக்கு தேர்தல் வந்தாலும் சசிகலா தலைமையில் தான் ஆட்சி அமையும் என உணர்ந்த காரணத்தினால் தான் ஆர்கே நகரிலே கட்சியின் சின்னம் இல்லாமல், பெயர் இல்லாமல் திடீரென கிடைத்த குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட போதும் மக்கள் ஆதரவினால் என்னால் வெற்றி பெற முடிந்தது. ஆர்கே நகரில் நடைபெற்றது இடைத்தேர்தல் அல்ல. எடைத் தேர்தல் தான் நடந்தது.

தொடர்ந்து திருவிடை மருதூர் தொகுதியில் திருப்பனந்தாள், மணலூர், ஆடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருபுவனம், நாச்சியார்கோயில், திருச்சேறை ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்கதமிழ்செல்வன், எம்.ரெங்கசாமி மற்றும் மணலூர் சுந்தர்ராஜன், ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் நிஜாம் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story