தூத்துக்குடியில் குறைந்த விலையில் சிமெண்டு தருவதாக கூறி நூதன மோசடி மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு


தூத்துக்குடியில் குறைந்த விலையில் சிமெண்டு தருவதாக கூறி நூதன மோசடி மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 March 2018 8:30 PM GMT (Updated: 7 March 2018 3:55 PM GMT)

தூத்துக்குடியில் குறைந்த விலையில் சிமெண்டு தருவதாக கூறி நூதன முறையில் பணம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் குறைந்த விலையில் சிமெண்டு தருவதாக கூறி நூதன முறையில் பணம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒப்பந்தக்காரர்

தூத்துக்குடி போல்டன்புரம் 1–வது தெருவை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவருடைய மகன் ஆனந்தன் (வயது 33). கட்டிட ஒப்பந்தக்காரர். இவரிடம், 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து, குறைந்த விலையில் சிமெண்டு இருப்பதாக கூறி உள்ளார். இதனால் ஆனந்தன் அந்த சிமெண்டை வாங்க முடிவு செய்தார்.

சிறிது நேரத்தில் ஒரு லோடு ஆட்டோவில் 60 மூட்டை சிமெண்டு கொண்டு வந்தார். அந்த சிமெண்டு மூட்டைகளை சிலர் போல்டன்புரம் 1–வது தெருவில் இறக்கிக் கொண்டு இருந்தனர்.

ரூ.15 ஆயிரம்

அப்போது, ஆனந்தனை அந்த நபர் நைசாக அழைத்து சென்று ரூ.15 ஆயிரம் வாங்கி உள்ளார். பின்னர் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி ஆனந்தனின் மோட்டார் சைக்கிளையும் ஓட்டி சென்றார். அதன்பிறகு நீண்டநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை.

அதே நேரத்தில் லோடு ஆட்டோவில் இருந்து சிமெண்டு மூட்டைகளை இறக்கியவர்கள் பணம் கேட்டு உள்ளனர். அப்போது, மர்மநபர் பணத்தை வாங்கி சென்றதாக ஆனந்தன் கூறி உள்ளார். ஆனால் சிமெண்டு மூட்டைகளை இறக்கியவர்கள், அவருக்கும், சிமெண்டு மூட்டைகளுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் சிமெண்டு மூட்டைகள் விற்பனைக்கு தான் ஏற்பாடு செய்தார் என்று கூறினர்.

வலைவீச்சு

அப்போதுதான் ஆனந்தன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர்கள் தாங்கள் இறக்கிய சிமெண்டு மூட்டைகளை மீண்டும் லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த நூதன மோசடி குறித்து ஆனந்தன் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்கு பதிவு செய்து, அந்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story