கச்சிராயப்பாளையத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு


கச்சிராயப்பாளையத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 March 2018 3:15 AM IST (Updated: 8 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையத்தில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் புதிய பஸ் நிலையம் அருகே வடக்கனந்தல் பேரூராட்சிக்குட்பட்ட வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வரும் குடிமகன்கள் மது குடித்து விட்டு போதை தலைக்கேறியவுடன் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் அருகில் உள்ள குளக்கரை தெரு பெண்களை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட குளக்கரை தெரு பகுதி மக்கள் தங்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையை பூட்டு போட்டு பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இதுவரை டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த புதிய பஸ் நிலையம், குளக்கரை தெரு பகுதி மக்கள் நேற்று காலை டாஸ்மாக் கடை மற்றும் கடையை வாடகைக்கு கொடுத்த பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கராஜா, மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், கடை இடமாற்றம் செய்வது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story