வேலூரில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது


வேலூரில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது
x
தினத்தந்தி 20 April 2018 10:07 PM GMT (Updated: 20 April 2018 10:07 PM GMT)

வேலூரில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வேலூர்,

வேலூரில் கோடைக்காலத்தில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சாதாரண நாட்களிலேயே சராசரியாக 100 டிகிரி கொளுத்தும் வெயில் தற்போது சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வேலூரில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கிறது. தொடர்ந்து வெயிலின் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை 10 மணிக்கே அனல் காற்று வீசத் தொடங்கியது. மாலையில் 106 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இதனால், சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

அனல் காற்று காரணமாக வாகனங்களில் சென்ற பெண்கள் துணியால் முகத்தை மூடிக்கொண்டு சென்றனர். ஆண்கள் தலையில் தொப்பி அணிந்து சென்றனர். நெடுஞ்சாலைகளில் கானல் நீராய் தெரிந்தது. இதன் காரணமாக நேற்று பகலில் பொதுமக்கள் வெளியே செல்லமுடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. குளிர்பான கடைகள், ஐஸ்கிரீம் பார், இளநீர், நுங்கு விற்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இரவில் புழுக்கமாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் வெளியில் படுக்க பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

இதனால் வெளியில் படுக்க முடியாமல் வீட்டுக்குள் படுக்க வேண்டிய நிலை உள்ளது. குழாய்களில் வரும் தண்ணீரும் வெந்நீர் போன்று இருந்தது. 

Next Story