திரு.வி.க.நகரில் சாலையின் நடுவே குப்பை தொட்டிகள் பொதுமக்கள் அவதி


திரு.வி.க.நகரில் சாலையின் நடுவே குப்பை தொட்டிகள் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 24 April 2018 11:30 PM GMT (Updated: 24 April 2018 7:21 PM GMT)

திரு.வி.க. நகரில் சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருக்கும் குப்பை தொட்டிகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

திரு.வி.க.

சென்னை திரு.வி.க. நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து செந்தில் அவென்யு மெயின் ரோடு, கிருஷ்ணா நகர் மெயின் ரோடு, ஆண்டாள் அவென்யு, காமராஜர் நகர், வெற்றி நகர், குமரன் நகர், வரதராஜன் தெரு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சென்றுவர கோபாலபுரம் பிரதான சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில் மாநகராட்சி சார்பில் 3 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. மேற்கூறிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலானோர் இந்த குப்பை தொட்டிகளில் குப்பை கொட்டிவருவதால் அதிகளவில் குப்பை சேர்ந்து குவியலாக காட்சி அளிக்கின்றன. மாநகராட்சி ஊழியர்கள் சுழற்சி முறையில் குப்பைகளை அள்ளி சென்றாலும் உடனுக்குடன் குப்பைகள் கொட்டப்பட்டு சாலை முழுவதும் குப்பை குவியலாக மாறிவிடுகிறது.

தொற்றுநோய்

மேலும் இந்த 3 குப்பை தொட்டிகளும் சாலையின் ஓரமாக வைக்கப்படாமல், சாலையின் நடுவே வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதே சாலையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அம்மா உணவகம் மற்றும் சில கோவில்கள் உள்ளன. எனவே தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு சாலையில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை கடந்து செல்கின்றனர்.

இங்கு கொட்டப்படும் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

சாலையின் ஓரம்

குப்பைகளை அள்ளும் மாநகராட்சி லாரிகள் பெரும்பாலும் காலை நேரங்களில் வருகின்றன. குப்பை தொட்டிகள் பாதி சாலையை ஆக்கிரமித்துள்ள நிலையில் குப்பைகளை அள்ள வரும் மாநகராட்சி குப்பை லாரி முழு சாலையையும் ஆக்கிரமிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

ஒரே இடத்தில் 3 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தாலும், அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதால், சாலையில் குப்பைகள் சிதறி குப்பை குவியலாக காட்சியளிக்கின்றன.

எனவே மேலும் 2 குப்பை தொட்டிகள் வைத்தால் குப்பைகள் சாலையில் சிதறுவதை தடுக்கலாம் என்றும், ஏற்கனவே இருக்கும் குப்பை தொட்டிகளையும், புதிய குப்பை தொட்டிகளையும் சாலையின் ஓரமாக வைக்கவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story