விளாத்திகுளம் அருகே கிராமசபை கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்
விளாத்திகுளம் அருகே கிராம சபை கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே கிராம சபை கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்.
கிராமசபை கூட்டம்
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் விருசம்பட்டி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், ஊராட்சிக்கான நிதி ஆதாரங்களை எவ்வாறு பயன்படுத்துவது, சுகாதாரமான குடிநீர் வழங்குவது, மத்திய- மாநில அரசால் செயல்படுத்தக்கூடிய பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து வேளாண்மை துறையின் கீழ் 5 விவசாயிகளுக்கு மண் வள அட்டை, சூரிய விளக்குப்பொறி, மகளிர் திட்டம் மூலம் 4 சுய உதவி குழுக்களுக்கு ரூ.6.35 லட்சம் கடன் உதவிகள், 2 நபர்களுக்கு தனிநபர் கடனாக தலா ரூ.15 ஆயிரத்திற்கான கடன் உதவி, பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் 9 நபர்களுக்கு இலவச கியாஸ் இணைப்பும், ஒரு நபருக்கு பிரதம மந்திரி அயோஜ் யோஜனா திட்டத்தின் கீழ் வேலை உத்திரவிற்கான ஆணையும், 100 நபர்களுக்கு தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தின் மூலம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மின்விளக்குகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார். பின்னர், விருசம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள தடுப்பணை பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) முத்துஎழில், மாவட்ட ஊராட்சி செயலர் பாது முகம்மது நசீர், சுகாதார பணிகள் இணை இயக்குனர்கள் கீதாராணி (தூத்துக்குடி), போஸ்கோராஜா (கோவில்பட்டி), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story