திருமண வீடாக மாறிய போலீஸ் நிலையம்


திருமண வீடாக மாறிய போலீஸ் நிலையம்
x
தினத்தந்தி 29 April 2018 8:15 AM GMT (Updated: 2018-04-29T13:15:10+05:30)

போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடையும் காதல் ஜோடிகளுக்கு போலீசார் முன்னின்று திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் போலீஸ் நிலையத்தையே திருமண வீடாக அலங்கரித்து ஏழை பெண் ஒருவருக்கு போலீசார் விமரிசையாக திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள். அந்த பெண்ணின் குடும்ப பின்னணியும், வாழ்க்கையில் அனுபவித்த சிரமமும் போலீசார் மனதை வெகுவாக பாதிக்க வைத்திருக்கிறது. அந்த பெண்ணை தத்தெடுத்து திருமண செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு புதிய வாழ்க்கைக்கு வழிஅமைத்து கொடுத்திருக்கிறார்கள்.

அந்த இளம் பெண்ணின் பெயர் மம்தா மஹாவர். டோங்க் மாவட்டத்திலுள்ள தட்வாஸ் பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒரே சகோதரரும் நோய்வாய்ப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார். அவருடைய மருத்துவ செலவுக்காக மம்தாவின் தாயார் சீமா தேவி பல இடங்களில் கடன் வாங்கி இருந்திருக்கிறார். மகனின் வருமானத்தை கொண்டுதான் குடும்ப செலவுகளை சமாளித்து வந்திருக்கிறார். அவன் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையாக கிடந்ததை பார்த்து மனதொடிந்து போனவர் சிகிச்சைக்காக பல இடங்களில் கடன் வாங்கி செலவளித்திருக்கிறார். ஆனாலும் மகனை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. மகன் சிகிச்சைக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த மம்தாவை வேலைக்கு அனுப்பும் நிர்பந்தம் உண்டாகி இருக்கிறது. குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மம்தா, தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தில் தின கூலி வேலைக்கு செல்ல தொடங்கி இருக்கிறார். ஆனால் அவருக்கு முறையாக ஊதியம் வழங்காமல் தாமதித்து வந்திருக்கிறார்கள்.

சகோதரரின் சிகிச்சைக்காக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். அதனால் தாயும், மகளும் பணத்திற்கு என்ன செய்வது என்று தடுமாறி இருக்கிறார்கள். குடும்ப செலவுகளையும் சமாளிக்க முடியாமல் திணறி இருக்கிறார்கள். இதற்கிடையே தேசிய வேலை வாய்ப்பு திட்ட பணியின் ஒரு அங்கமாக தட்வாஸ் போலீஸ் நிலைய வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் மம்தா ஈடுபட்டிருக்கிறார். அப்போது போலீசாரிடம் தனக்கு சம்பளம் வழங்கப் படாத விவரத்தை சொல்லி இருக்கிறார். அவருடைய குடும்ப பின்னணியை கேட்ட போலீசார் அனைவரும் தாமாக உதவுவதற்கு முன்வந்திருக்கிறார்கள்.பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பேசி மம்தாவுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த சம்பள தொகையை திரும்ப பெற்று கொடுத்திருக்கிறார்கள். தாயும், மகளும் குடும்ப செலவுகளுக்காக போராடுவதை பார்த்ததும் மாற்று ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் சீமா தேவி ‘தன் மகளுக்கு திருமணம் நடக்குமா? தனியொரு பெண்மணியாக தன்னால் அவளுக்கு திருமணத்தை நடத்தி வைக்க முடியுமா? அதற்காகும் பணத்திற்கு என்ன செய்வது?’ என்று கவலைப்பட்டிருக்கிறார். தன்னுடைய வேதனையை போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மம்தாவை தத்தெடுத்து அவருக்கு திருமணம் செய்துவைப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

மம்தாவின் திரு மணத்திற்காக போலீஸ் நிலையத்தின் முகப்பு பகுதி விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. போலீஸ் நிலையத்தின் உள் பகுதியையும் திருமண மண்டபத்திலுள்ள மண மேடைக்கு நிகரான அலங்கார வேலைப்பாடு களால் ஜொலிக்க வைத்துவிட்டார்கள். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த சுவடே தெரியாத அளவுக்கு அலங்காரத்தில் அசத்தியிருக்கிறார்கள். மணமகன் வீட்டாரிடமும் மம்தாவின் குடும்ப சூழ்நிலையை புரிய வைத்து இருதரப்பினருக்கும் இடையே சுமுக உறவை உருவாக்கி கொடுத்துவிட்டார்கள். போலீஸ் உயர் அதிகாரிகள், அந்த தொகுதி எம்.எல்.ஏ. உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள். போலீஸ் நிலையம் உறவுகள் சங்கமிக்கும் திருமண வீடாக காட்சியளித்தது.

‘‘நகர் பகுதிகளில் விமரிசையாக திருமணங்கள் நடப்பதை பார்க்கும்போது என் மகளுக்கும் இதேபோல் திருமணம் நடக்காதா? என்ற ஏக்கம் எனக்கு வரும். நம்மால் இவ்வளவு சிறப்பாக திருமணத்தை நடத்த முடியாதே என்று வேதனைப்படுவேன். போலீஸ் நிலையத்தில் என் மகள் திருமணம் நடந்த விதத்தை பார்த்து பிரமித்து போனேன். கடவுள் போலீசார் வடிவில் தேவதூதர்களை அனுப்பியது போல் இருந்தது. அந்தளவுக்கு என் மகள் திருமணத்தை போலீசார் விமரிசையாக நடத்திவிட்டார்கள்’’ என்று சீமா தேவி மனம் நெகிழ்ந்து கூறுகிறார். 

Next Story