பறித்தால் காய்.. உலுக்கினால் பழம்..


பறித்தால் காய்.. உலுக்கினால் பழம்..
x
தினத்தந்தி 29 April 2018 8:45 AM GMT (Updated: 29 April 2018 8:07 AM GMT)

தினமும் காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, மாலதி தோட்டத்திற்கு செல்ல தயாராகிறார். தோட்டத்தில் பறிக்கும் காய்கறிகள், கீரைகள், பழங்களை எடுத்து வருவதற்கு தேவையான கூடைகள், பைகளை காரில் ஏற்றிக் கொண்டு, தானே காரை ஓட்டிக்கொண்டு தோட்டத்தை நோக்கி பயணிக்கிறார்.

மாலதி வசிக்கும் சென்னை மேடவாக்கத்தில் இருந்து தோட்டம் அமைந்திருக்கும் அகரம்தென் கிராமம் எட்டு கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தோட்டத்தை அடையும்போதே இவரை உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அங்கே இவரை எதிர்பார்த்து ஐ.டி. துறையில் பணிபுரியும் திருமண மான பெண்களும், இளம் பெண்களும் காத்திருக்கிறார் கள். திருமணமான பெண்கள் தங்கள் பிள்ளைகளான சிறுவர், சிறுமியர்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கெல்லாம் மாலதி விவசாய களப் பயிற்சியளிக்கிறார். அங்கு அவர்கள் நிலத்தை சரிசெய்கிறார்கள். பாத்தி அமைக் கிறார்கள். விதைவிதைக்கிறார்கள். நீர்பாய்ச்சுகிறார்கள்.. மொத் தத்தில் அவர்கள் விவசாயிகளாகவே மாறி கீரை, காய்கறிகளை பயிரிடுகிறார்கள்.

உச்சி வெயிலில் நின்றபடி அவர்களுக்கு விவசாயத்தை கற்றுக்கொடுக்கும் மாலதி, “பெரும்பாலானவர்களுக்கு விவசாயத்தின் மீது பற்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் ஒன்றிரண்டு நாட்கள் கழனியில் இறங்கி வேலைபார்த்தால் விவசாயத்தை பற்றி தெரிந்துகொள்ளலாமே தவிர விவசாயியாக உருவாக முடியாது. அதனால் நான் ஆர்வமுள்ளவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் ஆறு மாதங்கள் என் தோட்டத்திலே விவசாயத்தை கற்றுக்கொடுக்கிறேன். இதை நாட்டுக்கு செய்யும் சேவையாக நினைத்து செய்துகொண் டிருக்கிறேன்.

இன்று ஒவ்வொரு பெண்ணுக்கும் கூடுதலாக இரண்டு கடமைகள் இருக்கின்றன. உணவு விஷமாக மாறி, உடல்நிலையை கெடுத்துக் கொண்டிருக்கிறது. அதில் இருந்து தப்பிக்க முதலில் அவர்களுக்கு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட ஆரோக்கிய மான காய்கறிகள் தேவை. அதை அவர்கள் தங்கள் வீடுகளிலே வளர்த்து, உணவில் பயன்படுத்தி தங்கள் குடும்பத்தின் ஆரோக் கியத்தை காப்பாற்ற வேண்டும். அதில் தன்னிறைவு பெற்ற பின்பு, சமூக நலன் கருதி அவர்கள் தனியாக இதுபோல் தோட்டங் களை அமைத்து இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகளை விளைவித்து மக்களுக்கு வழங்கி, நாட்டின் ஆரோக்கியத்தை மேம் படுத்தவேண்டும். அந்த இரண்டு கடமைகளையும் செய்ய இன்று நிறைய பெண்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்கவே இந்த ‘களத்துமேட்டு கற்றலை’ நடைமுறைப்படுத்தியிருக்கிறேன். இதில் இன்னொரு முக்கியமான விஷயம். இப்போது ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்கள் மிகுந்த மனஅழுத்தத்தோடு வாழ்கிறார்கள். அவர்கள் மனதை இலகுவாக்கி மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த இதுபோன்ற தோட்டங்களை அமைத்து விவசாயிகளாக மாற முன்வருகிறார்கள்” என்கிறார், மாலதி.

ஒரு ஏக்கர் பரப்புகொண்ட இவரது தோட்டத்தில் கோழி, ஆடு, தேனீ போன்றவைகளும் சுற்றி வருகின்றன. அங்கே 38 வகையான கீரைகளை விளைவிக்கிறார். தென்னை, மா, சப்போட்டா, கொய்யா, நெல்லி, சோளம், வேர்க்கடலை, சுண்டைக்காய், மஞ்சள், காராமணி போன்றவைகளும் பலவிதமான காய்கறிகளும் விளைந்திருக்கின்றன. அவைகள் ஒவ்வொன்றையும் எப்படி விளைவிப்பது என்று கற்றுக் கொடுத்தபடியே, அன்றன்றைய அறுவடையையும் கவனிக்கிறார்.

49 வயதான மாலதி என்ஜினீயரிங் கற்றவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியை சேர்ந்தவர். இவரது கணவர் துப்பறியும் துறை நிபுணர் அருள்மணிமாறன். மகள் டாக்டர் ஆர்த்தி, மகன் ரமணா சட்டம் படிக்கிறார்.

வேர்க்கடலையை அறுவடை செய்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்த மாலதி, தனது விவசாய வாழ்க்கையை விவரிக் கிறார்.

“எனது தந்தை கதிரேசன் மின்சார துறையில் என்ஜினீயராக வேலை பார்த்தார். அவர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு பணிமாற்றம் பெற்று போகும்போதெல்லாம் அம்மா அலமேலுவும் நானும் கூடவே சென்று விடுவோம். எல்லா இடத்திலும் எங்களுக்கு அரசு வீடு கிடைக்கும். அங்கே தோட்டம் அமைக்க நிறைய இடமும் இருக்கும். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்மா வீட்டுத் தோட்டம் வளர்ப்பதை பார்த்தே நான் வளர்ந்தேன். நாங்கள் வளர்க்கும் காய்கறிகளும், கீரைகளும்தான் எங்களுக்கு உணவாகின. ஈரோட்டில் பள்ளி யில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, பள்ளியிலே எங்களுக்கு தோட்டம் போட இடம் தந்து, அதன் விளைச்சலுக்கு தகுந்தபடி எங்களுக்கு மதிப்பெண் தருவார்கள். அதில் நான் எப்போதுமே அதிக மதிப்பெண் வாங்கிவிடுவேன்.

என்ஜினீயரிங் படிக்க சென்னை வந்தேன். படித்து முடித்த பின்பு இங்கேயே திருமண மானது. வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் மரம் வளர்க்கும் சேவையில் இறங்கினேன். 2000-ம் ஆண்டில் இருந்து வேளச்சேரி பகுதி விஜயநகரம், ராம் நகர் போன்ற இடங்களில் சாலை ஓரங்களில் மரங்களை நட்டு வளர்த்தேன். நான் வளர்த்த பல மரங்கள் பெரிதாக வளர்ந்து பலன் தருகிறது. மாடித் தோட்டம் அமைக்கவும் நிறைய பேருக்கு கற்றுக்கொடுத்தேன். மாடித் தோட்டத்திற்கான ஆலோசனை வழங்க இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். துப்பறியும் நிபுணர் பணியிலும் என்னை ஈடுபடுத்தி, பெண்களின் நலனுக்காக சில அதிரடியான வழக்குகளையும் கையாண்டு, துப்பு துலக்கி யுள்ளேன்” என்கிறார்.

மாடித் தோட்டத்தி்ல் இருந்து இவர், பெரிய தோட்டம் அமைத்து விவசாயம் செய்ய மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் புளியங்குடி அந்தோணிசாமி, கு.சித்தர் போன்றவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள்.



“நான் முழுமையாக விவசாயத்தில் ஈடுபட விரும்பியபோது வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றவர்களோடு நட்பு ஏற்பட்டது. 2007-ம் ஆண்டு சென்னைக்குள் எனது வயலில் வித்தியாசமான முறையில் ஒற்றை நாற்று நட்டு நெல் விளைவிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கு.சித்தரிடம் அது பற்றி விளக்கங்களை கேட் டேன். அவர் ஆலோசனைபடி நடவு செய்ய வயலுக்கு போனபோது, நடவுக்கு வந்த பெண்கள் என்னை பார்த்து கேலியாக சிரித்தார்கள். ஒற்றை நாற்று முறையை அவர்கள் விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொண் டார்கள். ‘நீ விவரம் தெரியாத பொண்ணு. உன் இடத்தில என்னத்தே வேணும்னாலும் நட்டுக்கோ. ஆனா நாங்க இந்த ஒற்றை நாற்றுகளை நட்டால் எங்களை பார்த்து ஊரே சிரிக்கும். இப்படி ஒரு விவசாய முறையே இங்கே கிடையாது’ என்று கூறிவிட்டு நாற்றுகளை நடவு செய்யாமலே போய்விட்டார்கள். அவமானத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நானே இறங்கி முழுக்க நட்டேன். நட்டு முடித்துவிட்டு வெளியே வந்து நின்று பார்த்தால் வயலே காலியாக கிடந்ததுபோல் இருந்தது. என்ன ஆகுமோ என்று குழம்பிக்கொண் டிருந்தபோது மாடு மேய்க்கும் ஒருவர் அந்த பக்கமாக வந்தார். அவர் என்னையும், வயலையும் மாறி மாறி பார்த்துவிட்டு, ‘இது அமோகமாக வளரும். கவலைப் படாதேம்மா!’ என்றார். நம்பிக்கையோடு இயற்கை விவசாய முறையில் பயிரை வளர்த்தேன். அது நல்ல பலனை கொடுத் தது..” என்று கூறும் மாலதி, ஜப்பானிய முறை விவசாயத்தையும் பின்பற்றுவதாக கூறுகிறார். அது பற்றியும் விளக்குகிறார்.

“மாசானா புக்கோவா என்பவர் ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி. 30 ஆண்டுகாலம் அந்த நாட்டு அரசாங்க பணியில் இருந்த அவர், பின்பு பணியில் இருந்து விலகி தனது பெற்றோர் வழியில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். அதில் புதுமையும் செய்தார். அதாவது அவர் நெல் பயிரிட்டால், அறுவடை முடிந்த பின்பு வைக்கோலை அந்த வயலிலே விட்டுவிடுவார். கூடவே அறுவடை செய்த நெல்லில் ஒருபகுதியையும் அங்கே தூவிவிடுவார். ரை எனப்படும் பயிரை அறுவடை செய்யும்போதும் அவ்வாறே செய்வார். இதனால் ஒரே பயிரை நம்பி இருக்காமல், பயிர்கள் மாறி மாறி வளர்ந்து பலன் கொடுத்தது. அதுபோல் ஒவ்வொரு பயிருக்கும் நட்பு பயிரும் உண்டு. அவைகளை பற்றி ஆராய்ச்சி செய்தும் வெளியிட்டார். நட்பு பயிர்களை கலந்து விதைத்தால் நன்றாக விளைந்து அதிக மகசூல் தரும். இந்த முறையை நான் பின்பற்றி நட்பு பயிர்களை எல்லாம் கலந்து விளைவிக்கிறேன். அத னால்தான் ஒரே தோட் டத்தில் கிட்டத்தட்ட ஐம்பது விதமானவற்றை என்னால் பயிரிடமுடி கிறது. தோட்டத்திற்கு தேவையான பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், பூச்சி விரட்டி போன்ற பலவிதமான இடுபொருட்களையும் தயா ரித்து பயன்படுத்து கிறேன் தேவைப்படுகிறவர்களுக்கு கொடுக்கவும் செய்கிறேன்” என்கிறார்.

“பெண்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழவேண் டும்” என்று கூறும் மாலதி, இயற்கை விவசாயத்தில் லாபம் சம்பாதிப்பது எப்படி என்றும் விளக்கு கிறார்.

“திட்டமிட்டு, தைரியமாக பெண்கள் விவசாயத்தில் இறங்கிவிடவேண்டும். முதல் ேவலையாக அவர்கள் விவசாய பணிகளை முழுமையாக கற்றுக்கொள்ளவேண்டும்.. பெண்களுக்கு விவசாய பணிகளை பற்றி தெளிவாக தெரியாவிட்டால், அவர்களால் விவசாய பணியாளர்களைவைத்து நன்றாக வேலை வாங்க முடியாது. முதலில் ஆராய்ச்சி மனோபாவத்தில் ஆரம்பியுங்கள். சிறிது நஷ்டம் வந்தாலும் அதை பெரிதுபடு்த்தாமல் அனுபவமாக ஏற்றுக்கொள்ளுங்கள். காலத் துக்கு ஏற்றபடி பயிரிடவேண்டும். எல்லா கீரைகளும் கோடைகாலத்தில் நன்றாக வளரும். ஆனால் மழைக்காலத்தில் அதிக அளவில் பூச்சிகள் தோன்றும். அதனால் மழைக்காலத்தில் தவசி முருங்கை, கல்யாண முருங்கை, முடக்கத்தான், தூதுவளை, பொன்னாங்கன்னி போன்றவைகளை பயிரிட வேண்டும். இயற்கை விவசாய பொருட்கள், பூச்சி மருந்து அடித்த பொருட்களைபோல் பளபளப்பாக இருக்காது. லேசாக பூச்சி கடித்ததும் இருக்கத்தான் செய்யும். கோயம்பேடு மார்க்கெட்டில் ஐந்து ரூபாய்க்கு கீரை விற்றால் நாம் 15 ரூபாய்க்கு விற்கவேண்டியதிருக்கும். விலைஉயர்ந்தாலும் ஆரோக்கியம் கருதி இதைத்தான் மக்கள் வாங்குவார்கள். நமது தோட்டத்தில் கிள்ளினால் கீரை, பறித்தால் காய், உலுக்கினால் பழம், தோண்டினால் கிழங்கு, ேதடினால் முட்டை (கோழி வளர்ப்பு), நாடினால் தேன் (தேனீ வளர்ப்பு), பிடித்தால் குட்டி (ஆடுவளர்ப்பு) போன்ற அனைத்தையும் உருவாக் கினால் நிறைய லாபம் சம்பா திக்கலாம். ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் நீண்ட காலம் நாட்டுக்கு பலனுள்ள வாழ்க்கை வாழலாம்” என்கிறார், இயற்கை விவசாயி மாலதி. 

Next Story