பெண்களின் வயதும்.. வருமானமும்.. செலவும்..


பெண்களின் வயதும்.. வருமானமும்.. செலவும்..
x
தினத்தந்தி 29 April 2018 9:30 AM GMT (Updated: 29 April 2018 9:01 AM GMT)

பெண்கள் குடும்பத்தை நிர்வகிப்பதில் சிறப்பானவர்கள். வேலைசெய்து சம்பாதிப்பதிலும் சளைத்தவர்கள் அல்ல.

கைக்கு வரும் பணத்தை காலத்துக்கும், வயதுக்கும்தக்கபடி சேமிக்க வேண்டும் என்றாலும், செலவு செய்யவேண்டும் என்றாலும் ஆண்களின் ஆலோசனை அவர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது. பெண்கள் தங்கள் பணத்தை தாங்களே சரியான முறையில் செலவிட கற்றுக் கொள்ள வேண்டும்.

படித்து வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண்களின் வாழ்க்கையை நான்கு கட்டங்களாக பிரிக்கலாம். அவை: திருமணத்திற்கு முந்தைய காலம், திருமணத்திற்கு பிந்தைய காலம், விவாகரத்து அல்லது விதவையாய் தனியாக வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படும் காலம், ஓய்வுக் காலம்.

திருமணத்திற்கு முந்தைய காலம்

படித்து முடித்ததும் வேலைக்கு செல்லும் காலகட்டம் இது. 20 முதல் 30 வயது பருவம் என்று இதனை எடுத்துக்கொள்ளலாம். இந்த பருவத்தில்தான் முதன் முதலாவதாக சுயமாக சம்பாதிக்கத் தொடங்குவார்கள். சம்பாதித்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும், கிடைக்கும் பணத்தை எல்லாம் செலவிட்டுவிடவேண்டாம். அதே நேரத்தில் கஞ்சத்தனமாகவும் நடந்துகொள்ளவேண்டாம். இந்த பருவத்தில் ஸ்மார்ட் போன், லேப்டாப், வாகனம் போன்றவைகளை எல்லாம் வாங்கும் எண்ணம் உருவாகும். அடிக்கடி ஷாப்பிங் செய்யவேண்டிய சூழ்நிலை இருந்தால், எப்போதும் பணத்தை கையில் வைத்திருப்பதை தவிர்க்க கிரடிட் கார்டு ஒன்று வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அதை அளவோடு பயன் படுத்துவது மிக அவசியம்.

அடு்த்த ஐந்து ஆண்டுகளில் மிக முக்கியமாக எதை எல்லாம் வாங்கவேண்டும் என்ற பட்டியல் ஒன்று தயாரியுங்கள். ஆனால் கடனில் எதையும் வாங்க முயற்சிசெய்யாதீர்கள். நீங்கள் படிப்பதற்காக கடன் வாங்கியிருந்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து செலுத்திவிடுங்கள். பெற்றோரின் தேவைக்கு, சகோதர- சகோதரி களின் படிப்பு செலவுக்கு கைகொடுங்கள். குடும்பத்தின் தேவைக்காக மருத்துவ காப்பீடு ஒன்றில் சேர்ந்திடுங்கள். பணத்தை பலனுள்ள வழிகளில் சேமிக்கவும் செய்யலாம். திருமணம் நினைவில் இருக்கட்டும். அதன் செலவுக்கான பணத்தையும் சேமியுங்கள்.

உங்கள் மாத வருமானத்தில் 25 சதவீதத்தை உங்கள் தனிப்பட்ட செலவுக்காகவும், 25 சதவீதத்தை சேமிப்புக்காகவும், 50 சதவீதத்தை குடும்ப நலனுக்காக பெற்றோரிடம் வழங்குவதற்காகவும் ஒதுக்குங்கள். சம்பளம் உயர உயர சேமிப்பை உயர்த்துங்கள். செலவை உயர்த்திவிடாதீர்கள்.

திருமணத்திற்கு பிந்தைய காலம்

இது 30 முதல் 45 வயதான காலகட்டத்தை குறிக்கும். குடும்பத்தலைவியான பின்பு பணத்தை செலவிடுவதில் பெண்கள் கைதேர்ந்துதான் ஆகவேண்டும். வீட்டு செலவுக்கு கணவன்-மனைவி இருவரது பணமும் உபயோகமாகும் விதத்தில் குறிப்பிட்ட ெதாகையை இருவரும் ஒதுக்குங்கள். மீதி பணத்தில் ஒரு பகுதியை குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி சேமியுங்கள். சேமிப்பு இரண்டு பேர் பெயரிலும் அமையட்டும். அல்லது நாமினியாகவாவது மனைவி இருக்கவேண்டும். வீடு, நிலம் போன்றவை வாங்கும்போதும் அது இருவர் பெயரிலும் பதிவுசெய்யப்படவேண்டும்.

இந்த காலகட்டத்தில் அலுவலக பணிகளில் பெண்கள் அனுபவசாலிகளாகி விடுவார்கள். அதனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். அதனால் நிறைய செலவு செய்துவிடக்கூடாது. எல்லா செலவுகளும் போக உங் களிடம் மாதம் 7 ஆயிரம் ரூபாய் மிச்சம் வருகிறதென்றால், எதிர்காலத்தில் குழந்தைகளின் உயர்கல்விக்காக இப்போதே மாதம் 2 ஆயிரம் ரூபாய் சேமிக்கலாம். அதற்குரிய திட்டங்கள் தெரிந்து சேமிக்கவேண்டும். மாதம் ஆயிரம் ரூபாய் மியூச்சுவல் பண்ட், 500 ரூபாய் வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் செய்யலாம். மீதி பணத்தை வீடு, கார் போன்றவை வாங்க சேமிக்கலாம்.

விவாகரத்து ஆகிவிட்டால்..

வாழ்க்கை விசித்திரமானது. எதிர்பார்க்காத எதுவும் வாழ்க்கையில் நடக்கலாம். திருமண வாழ்க்கை சரியில்லாமல் போய், விவாகரத்து ஆகி, தனியாக வாழவேண்டிய கட்டாயமும் உருவாகலாம். அப்படிப்பட்ட நிலை உருவாகும்போது நஷ்டஈடாக கிடைக்கும் தொகை மற்றும் ஜீவனாம்சமாக கிடைக்கும் பணத்தை கவனமாக செலவிடவேண்டும். பணம் ஒரே நேரத்தில் கிடைப்பதாக இருந்தால், அதிக வட்டிக்கு கடன் ஏதாவது வாங்கியிருந்தால் அதை முதலில் திரும்பச் செலுத்திவிடுங்கள். மாதந்தோறும் ஜீவனாம்ச பணம் கிடைப்பதாக இருந்தால் மியூச்சுவல் பண்ட், சீட்டு, ரெக்கரிங் டெபாசிட் போன்றவை மூலம் பணத்தை சேமிக்கலாம். கணவர் வாங்கிய கடனில் பங்கு இருப் பதுபோல் இருந்தால் அதை முதலிலே பேசி, அதில் இருந்து விடுபட்டு விடுங்கள். இரு வரும் இணைந்து கிரடிட் கார்டு வாங்கியிருந்தால் அதையும் ரத்துசெய்துவிடுங்கள். ஜாயின்ட் பேங்க் அக்கவுண்ட் இருந்தாலும் ரத்து செய்துவிடுங்கள்.

டேர்ம் இன்சூரன்ஸ் உங்கள் பெயரில் இல்லாவிட்டால் உடனே அதில் சேருங்கள். நீங்கள் மரணமடைந்தால் குறிப்பிட்ட தொகை உங்கள் வாரிசுக்கு கிடைக்க வகை செய்யும் பாலிசி இது. மெடிகிளைம் இன்சூரன்ஸ் கணவரின் பெயரில் இருந்தால், அதன் பலன் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். உங்கள் குழந்தைகளுக்கு பலன் கிடைக்கும். ஆனாலும் உங்களுக்கும், குழந்தைகளுக்கும் பலன் கிடைக்கும் விதத்தில் புதிய மருத்துவ காப்பீடு செய்துகொள்ளுங்கள். விபத்து காப்பீடு பாலிசியும் பெறலாம்.

விதவையாகிவிட்டால்..

கணவர் இறந்து போவது என்பது தாங்கிக்கொள்ள முடியாத விஷயம்தான். ஆனால் குடும்பத்தை காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அதன் பிறகு பெண்களுக்கு வந்துவிடுகிறது. முதலில் எவ்வளவு கடன் இருக்கிறது; எவ்வளவு சொத்து இருக்கிறது; எவ்வளவு வருமானம் இருக்கிறது என்ற பட்டியலை தயாரியுங்கள். இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் பணத்தை பெற தேவையான ஆவணங்களை தயார் செய்யுங்கள்.

வங்கிகளில் எந்தெந்த கணக்குகளில் சேமித்திருக்கிறார் என்ற தகவலை சேகரியுங்கள். திருமண சான்றிதழ், இறப்பு சான்றிதழ், உயில் போன்றவைகளையும் தாமதிக்காமல் சேகரியுங்கள். இந்த காலகட்டத்தில் செலவை குறைக்கவேண்டும். கணவரின் டெபாசிட், இன்சூரன்ஸ், வங்கி இருப்பு போன்றவைகளை பெற்று உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டும்.

ஓய்வுக் காலத்தில்...

பெண்களின் ஓய்வுக் காலம் பெரும்பாலும் தள்ளாடும் காலமாகிவிடுகிறது. உடல் தள்ளாடினாலும் அவர்கள் பொருளாதாரத்தில் தள்ளாடும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. ஏெனன்றால் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் பெண்கள் 20 முதல் 30 ஆண்டு காலம் நிம்மதியாக வாழவேண்டும். ஏற்கனவே சேமித்த பணத்தை கவனமாக செலவிடவேண்டும். சேமிப்பு இருந்தாலும் ஆரோக்கியம் இருக்கும் பட்சத்தில் அதற்கு தகுந்த வேலை ஒன்றை தேடிக்கொள்ளவும் செய்யலாம். ஓய்வு கால வாழ்க்கையில் ஒருபோதும் பணத்தி்ற்கு பின்னால் ஓடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடக்கூடாது. நிம்மதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும்தான் முக்கியம். இப்போது உங்களுக்கு 30 வயது என்றாலும், 40 வயது என்றாலும், உங்களுக்கும் ஒரு முதுமை இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பணத்தை செலவிடுங்கள். 

Next Story