அ.தி.மு.க.வில் யாரை சேர்ப்பது என்று கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் - தம்பிதுரை பேட்டி


அ.தி.மு.க.வில் யாரை சேர்ப்பது என்று கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் - தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 29 April 2018 11:30 PM GMT (Updated: 29 April 2018 9:09 PM GMT)

அ.தி.மு.க.வில் யாரை சேர்ப்பது என்று கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் என்று தம்பிதுரை கூறினார்.

கோவை,

கரூரில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் செல்வதற்காக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று கோவை விமான நிலையம் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- திவாகரன் புதிய கட்சி தொடங்கி உள்ளாரே? அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி. அ.தி.மு.க. ஆட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் காப்பாற்ற அனைவரும் ஒன்றாக செயல்படவேண்டும்.

கேள்வி:- சசிகலா குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்ளமாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளாரே?

பதில்:- கட்சியில் யாரை சேர்க்கவேண்டும் என்பது தொடர்பாக தலைமை தான் முடிவு எடுக்கும். ஜெயக்குமாரோ, தம்பிதுரையோ தனிப்பட்ட நபர்கள் முடிவு செய்ய முடியாது.

கேள்வி:- தினகரன்- திவாகரன் பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என கூறப்படுகிறதே?

பதில்:- யூகத்திற்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது.

கேள்வி:- 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பு விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளதே?

பதில்:- நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது.

கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறதே?

பதில்:- தி.மு.க. தலைவர் கருணாநிதி 1971 முதல் 1974-ம் ஆண்டுகளில் செய்த தவறே காவிரி பிரச்சினைக்கு காரணம் ஆகும்.

கேள்வி:- காவிரி பிரச்சினையில் மத்திய அரசை அ.தி.மு.க. விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வருகிறதே?

பதில்:- மக்களை திசை திருப்ப அ.தி.மு.க. மீது பழி சுமத்தும் தி.மு.க.வின் சதியினை மக்களிடம் எடுத்து சொல்லியே தீரவேண்டும். காவிரி பிரச்சினையில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளை நம்பவில்லை. சுப்ரீம் கோர்ட்டு மூலம் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். கோர்ட்டை நாடுவது தவிர வேறு வழியில்லை. இதை தான் அ.தி.மு.க. செய்து வருகிறது.

கேள்வி:- டெல்டா மாவட்டங்களில் கூடுதல் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளார்களே?

பதில்:- அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story