வெள்ளகோவில் அருகே விடுதியில் தங்கி கல்லூரியில் படிக்க வேண்டாம் என்றதால் மாணவி தீக்குளித்து தற்கொலை


வெள்ளகோவில் அருகே விடுதியில் தங்கி கல்லூரியில் படிக்க வேண்டாம் என்றதால் மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2018 9:25 PM GMT (Updated: 29 April 2018 9:25 PM GMT)

விடுதியில் தங்கி கல்லூரியில் படிக்க பெரியப்பா மறுத்ததால் வெள்ளகோவில் அருகே தீக்குளித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளகோவில்,

வெள்ளகோவில் அருகே உள்ள செல்வக்குமார கவுண்டன்வலசை சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மகள் ராகவி. இவள் குழந்தையாக இருக்கும்போது, ராகவியின் தாய் இறந்து விட்டார். இதனால் வேலுசாமி, 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குழந்தை ராகவியை விட்டு விட்டு, வேலுசாமி தனது 2-வது மனைவியுடன் வெளியூர் சென்று விட்டார். இதனால் ராகவியை அவருடைய பெரியப்பா சேகர் வளர்த்து வந்தார். தற்போது ராகவிக்கு வயது 18 ஆகிறது.

இதையடுத்து ராகவி முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாள். பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்து இருந்தார். இதையடுத்து தனது பெரியப்பாவிடம் ராகவி “ விடுதியில் தங்கி கோவையில் உள்ள கல்லூரியில் படிக்க வேண்டும்” தனது ஆசையை தெரியப்படுத்தி உள்ளார். ஆனால் அவர், அங்கு எல்லாம் படிக்க வேண்டாம், நமது ஊரின் அருகில் உள்ள கல்லூரியில் படி என கூறியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த மாணவி, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே ராகவி இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் விரைந்து சென்று, மாணவி ராகவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விடுதியில் தங்கி கல்லூரியில் படிக்க பெரியப்பா மறுத்ததால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story