ஆரணியில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை: அமைச்சர் வழங்கினார்


ஆரணியில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை: அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 29 April 2018 9:30 PM GMT (Updated: 29 April 2018 9:30 PM GMT)

ஆரணியில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

ஆரணி, 

திருவண்ணாமலை மாவட்ட பொது நூலக இயக்ககம், மாவட்ட நூலக ஆணைக்குழு, ஆரணி மாவட்ட கிளை நூலகம், வாசகர் வட்டம் ஆகியவை இணைந்து உலக புத்தக தினவிழா ஆரணி சுப்பிரமணியசாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் சாந்திசேகர், வக்கீல் கே.சங்கர், வாசகர் வட்டத்தலைவர் புலவர் மா.சுப்பிரமணியன், பள்ளி தாளாளர் பி.டி.எஸ். ஜோதிசெல்வராஜ், தலைமையாசிரியை எஸ்.மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) அர.கோகிலவாணி வரவேற்றார். உலக புத்தக தினவிழாவையொட்டி ஆரணி சிறுகதை எழுத்தாளர்களை கவுரவித்தும், புரவலர்களுக்குப் பட்டயம் வழங்கியும், பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த புத்தக தினப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், நூலக புரவலர்களையும் அமைச்சர் பாராட்டி சான்றுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார்.

அப்போது அமைச்சர் பேசுகையில், ஆரணி நூலகத்தில் 17 ஆயிரத்து 618 உறுப்பினர்கள் இருப்பதாகவும், 6100 மாணவர்கள் நூலகத்தில் படித்து வருவதாகவும், 54 ஆயிரத்து 17 புத்தகங்கள் நூலகத்தில் இருப்பதாகவும் கூறினார். நூலகத்தில் சிதிலமடைந்த கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் செலவில் மாடி கட்டிடம் அமைத்துத் தருவதாகவும் உறுதியளித்தார். சிறுகதை எழுத்தாளர்கள் பவித்ரா நந்தகுமார், விழியரசு, பழனி, விஜயன், பொன்னம்பலம், பள்ளி தலைமையாசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் கிளை நூலகர் முகுந்த் நன்றி கூறினார்.

அதைத்தொடர்ந்து ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 42 வீடுகள் கட்டுவதற்காக பயனாளிகளுக்கு பணி உத்தரவையும், ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 44 சத்துணவுக்கூடங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பாத்திரங்களையும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கி பேசினார்.

விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, க.கிருஷ்ணமூர்த்தி, எம்.பாண்டியன், ரமாதேவி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி.பாபு, பாசறை நிர்வாகி பி.ஜி.பாபு, நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழன் நன்றி கூறினார்.

Next Story