மொடக்குறிச்சி அருகே 15 ஆண்டுகளாக போடப்படாத தார் ரோடு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்


மொடக்குறிச்சி அருகே 15 ஆண்டுகளாக போடப்படாத தார் ரோடு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 April 2018 9:38 PM GMT (Updated: 29 April 2018 9:38 PM GMT)

மொடக்குறிச்சி அருகே கடந்த 15 ஆண்டுகளாக தார் ரோடு போடப்படவில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மொடக்குறிச்சி,.

மொடக்குறிச்சி அருகே உள்ள ஆனந்தம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி கரியாகவுண்டன் வலசு. இந்த கிராமத்தில் இருந்து ஈரோடு-முத்தூர் மெயின் ரோடு வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் ரோடு போடப்பட்டு உள்ளது.

இந்த ரோடு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. ஆனால் இந்த ரோட்டின் இடைப்பட்ட பகுதியில் 2 பர்லாங் தூரத்துக்கு ரோடு போடப்படவில்லை. இதனால் அந்த ரோட்டில் உள்ள கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘கரியாவுண்டன் வலசில் இருந்து ஈரோடு-முத்தூர் மெயின் ரோடு வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் ரோடு இருந்தது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரோடு தார் ரோடாக மாற்றப்பட்டது. ஆனால் இந்த ரோட்டின் இடைப்பட்ட இடத்தில் 2 பர்லாங் தூரத்துக்கு தார் ரோடு போடப்படவில்லை. தார் ரோடு போடப்படுவதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் பணிகள் நடைபெறவில்லை.

இதுபற்றி முன்பு எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஆர்.எம்.பழனிச்சாமி, ஆர்.என்.கிட்டுசாமி, தற்போதை எம்.எல்.ஏ.வான வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோரிடம் புகார் தெரிவித்துவிட்டோம். அதுமட்டுமின்றி மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரிகளாக பணியாற்றிய 15-க்கும் மேற்பட்டவர்களிடமும் புகார் தெரிவித்துவிட்டோம். ஆனால் 15 ஆண்டுகள் ஆகியும் என்ன காரணமோ 2 பர்லாங் தூரத்துக்கு மட்டும் தார் ரோடு போடப்படவில்லை. இந்த ரோடு வழியாகத்தான் எங்கள் பகுதியில் விளையும் விவசாய விளைபொருட்களை வாகனங்களில் கொண்டு செல்கிறோம். இந்த ரோடு பழுதடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

மேலும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு எழுமாத்தூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. உடனே அவர் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரி ஹேமலதா மற்றும் ஒன்றிய பொறியாளர்களை அழைத்து ரோடு போடுவதற்கான வரைவு திட்டத்தை தயாரித்து அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மறுநாள் அதிகரிகள் உடனடியாக வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். அதன் பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டர் உத்தரவிட்ட பின்னரும், ரோடு பணியை தொடங்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவது ஏன் என்பது புரியவில்லை. எனவே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தார் ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மொடக்குறிச்சி நால் ரோடு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட உள்ளோம்,’ என்றனர்.

Next Story