சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு செல்ல பஸ்களில் கூட்டம் அலைமோதியது: கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார்


சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு செல்ல பஸ்களில் கூட்டம் அலைமோதியது: கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார்
x
தினத்தந்தி 29 April 2018 10:30 PM GMT (Updated: 29 April 2018 9:52 PM GMT)

சித்ரா பவுர்ணமிக்கு வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்ல பஸ்களில் கூட்டம் அலைமோதியது. சிறப்பு பஸ் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

வேலூர்,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்ரா பவுர்ணமியும் ஒன்றாகும். இதையொட்டி அண்ணாமலையாரை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம்.

ஆண்டுதோறும் வேலூரில் இருந்து சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலைக்கு ஏராளமானோர் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதன்படி இந்தாண்டும் சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

நேற்று காலை 7.05 மணிக்கு சித்ரா பவுர்ணமி தொடங்கியது. அதனால் அதிகாலை முதலே திருவண்ணாமலைக்கு செல்ல வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலை வழியாக செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பலர் பஸ்களில் நின்றபடியே சென்றனர். தொடர்ந்து நேரம் செல்ல, செல்ல திருவண்ணாமலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மதிய வேளையில் பயணிகள் பஸ் இல்லாமல் வெகு நேரமாக காத்திருந்தனர்.

திருவண்ணாமலைக்கு செல்லும் அனைத்து பஸ்களும் சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் இயக்கப்பட்டது. அதில் திருவண்ணாமலைக்கு பயண கட்டணமாக ரூ.71 வசூலிக்கப்பட்டது. வழக்கமான நாட்களில் திருவண்ணாமலைக்கு ரூ.56 வசூலிக்கப்படும். ஆனால் நேற்று சிறப்பு பஸ் என்ற பெயரில் கூடுதலாக ரூ.15 அதிகமாக வசூலிக்கப்பட்டது. வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வழக்கமாக செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட பஸ் நிறுத்தங்களில் நின்று செல்லும்.

ஆனால் சிறப்பு பஸ்கள் குறிப்பிட்ட பஸ் நிறுத்தங்களில் நின்று செல்லவில்லை. சாதாரண பஸ்கள் மிகவும் குறைந்த அளவே இயக்கப்பட்டன. அதனால் சந்தவாசல், போளூர், நாயுடுமங்கலம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் மக்கள் பஸ் வசதி இன்றி அவதிக்கு உள்ளாயினர். திருவிழா காலங்களில் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் சாதாரண கட்டணம் வசூலிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story