தேர்தலில் நான் ‘கிங்மேக்கர்’ அல்ல- ‘கிங்’ ஆவேன் பா.ஜனதாவுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டணி குமாரசாமி பேட்டி


தேர்தலில் நான் ‘கிங்மேக்கர்’ அல்ல- ‘கிங்’ ஆவேன் பா.ஜனதாவுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டணி குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 29 April 2018 10:05 PM GMT (Updated: 29 April 2018 10:05 PM GMT)

சட்டசபை தேர்தலில் நான் ‘கிங்மேக்கர்‘ அல்ல, ‘கிங்‘ ஆவேன் என்றும் பா.ஜனதாவுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டணி அமைத்து இருப்பதாகவும் குமாரசாமி கூறினார்.

பெங்களூரு, 

சட்டசபை தேர்தலில் நான் ‘கிங்மேக்கர்‘ அல்ல, ‘கிங்‘ ஆவேன் என்றும் பா.ஜனதாவுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டணி அமைத்து இருப்பதாகவும் குமாரசாமி கூறினார்.

ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்

கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி தீவிர பிரசாரம் நடத்தி வருகிறார். இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே அவர் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆட்சிகளின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துவிட்டனர். அதே போல் மாநில மக்கள் எங்கள் கட்சிக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இந்த முழக்கத்தை முன்வைத்து நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் கட்சி வெற்றி பெற்று சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனது இலக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். இதற்காக நான் வியூகங்களை வகுத்துள்ளேன்.

இலக்கை அடைவது உறுதி

என்னை பொறுத்தவரையில் எங்கள் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள். இன்றைய நிலவரப்படி 105 தொகுதிகள் வரை வெற்றி பெறுவோம். இன்னும் மீதமுள்ள நாட்களில் போராடி எங்களின் இலக்கை அடைவது உறுதி. அதனால் ஆட்சி அமைக்க எங்களுக்கு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைவாக கிடைக்காது.

கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இல்லை. கருத்து கணிப்புகள் கூறுவது போல் நடக்காது. நான் ‘கிங்மேக்கர்‘(மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது) ஆக மாட்டேன். நான் ‘கிங்‘(தானே ஆட்சி அமைப்பது) ஆவேன். மக்கள் என்னை ஆதரிப்பார்கள். மாநிலத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது. காங்கிரஸ், பா.ஜனதா மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

நல்லாட்சியை நடத்தும் அரசு

நான் ஆட்சிக்கு வந்தால் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன். இந்த தேர்தல் எங்கள் கட்சியை நிலை நிறுத்திக்கொள்ள நாங்கள் போராடும் களம் ஆகும். நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்திற்கு வெளியே இருக்கிறோம். அதிகாரம் இல்லாவிட்டாலும் எங்கள் கட்சி தொண்டர்கள் மிக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக நான் உள்பட எங்கள் கட்சியினர் கடுமையாக உழைக்கிறார்கள்.

எங்களின் சுயநலத்திற்காக ஆட்சிக்கு வர விரும்பவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன. அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக நான் ஆட்சிக்கு வர விரும்புகிறேன். கர்நாடகத்திற்கு நல்லாட்சியை நடத்தும் அரசு அமைய வேண்டும்.

பா.ஜனதாவுடன் ரகசிய கூட்டணி

எங்கள் கட்சியை பா.ஜனதாவின் ‘பி டீம்‘ என்று ராகுல் காந்தி கூறுகிறார். சித்தராமையா தான் பா.ஜனதாவின் ‘பி டீம்‘. எங்கள் கட்சிக்கு எதிராக எந்த குறையும் காங்கிரசால் கூற முடியவில்லை. அதனால் இவ்வாறு ராகுல் காந்தி கூறுகிறார். 2008-ம் ஆண்டு பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து நாங்கள் ஆட்சி நடத்தினோம். இந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு காங்கிரஸ் இவ்வாறு விமர்சித்து வருகிறது.

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது நான் தான் பல்வேறு ஊழல்களை பகிரங்கப்படுத்தினேன். இதை காங்கிரஸ் செய்யவில்லை. சித்தராமையா தனது அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள அடிக்கடி பா.ஜனதாவுடன் ரகசிய கூட்டணி வைத்துக்கொள்கிறார். 2013-ம் ஆண்டு வருணா தொகுதியில் தேர்தலையொட்டி பா.ஜனதா வேட்பாளர் 5 நாட்கள் காணாமல் போய்விட்டார்.

வருணா தொகுதியில்...

அந்த வேட்பாளருடன் சித்தராமையா ரகசிய உடன்பாடு வைத்திருந்தார். இதே முறையில் தற்போதும் வருணா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மாற்றப்பட்டார். இதன் பின்னணியில் இருப்பது யார்?. சித்தராமையா இன்று கூட பா.ஜனதாவுடன் தொடர்பில் தான் உள்ளார். ஆனால் எங்களை சித்தராமையா குறை சொல்கிறார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story