சாலாமேடு ரெயில்வே சுரங்கப்பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 15 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம், 187 பேர் கைது


சாலாமேடு ரெயில்வே சுரங்கப்பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 15 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம், 187 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2018 11:00 PM GMT (Updated: 29 April 2018 10:43 PM GMT)

விழுப்புரம் சாலாமேடு ரெயில்வே சுரங்கப்பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 கிராமங்களை சேர்ந்த 187 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் திருப்பாச்சனூர் நெடுஞ்சாலையில் சாலாமேடு ரெயில்வே கேட் உள்ளது. இரட்டை வழி ரெயில்பாதை அமைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த ரெயில்வே கேட் வழியாக அதிகளவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரெயில்வே கேட் வழியாக ராமானுஜபுரம், திருப்பாச்சனூர், சாமிபேட்டை, தளவானூர், காவணிப்பாக்கம், சாலாமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விழுப்புரம் நகருக்கு வந்து செல்ல பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சாலாமேடு ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூடிவிட்டு, அங்கு சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுரங்கப்பாதை திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. ரெமேட் முறையில் கான்கிரீட் கட்டைகள் வைத்து இந்த சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதையறிந்த இந்த பாதையை பயன்படுத்தும் கிராமமக்கள் சாலாமேடு ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதைக்கு பதிலாக, மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ராமானுஜபுரம் உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சாலாமேடு ரெயில்வே கேட் பகுதி முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள் சுரங்கப்பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேம்பாலம் அமைக்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பியபடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தாசில்தார் சுந்தரராஜன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது கிராம மக்கள் கூறுகையில், இங்கு சுரங்கப்பாதை திட்டம் அமைந்தால், கரும்பு உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்களை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு இந்த சுரங்கப்பாதை வழியாக விவசாயிகளால் விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்ல முடியாது. அருகில் உள்ள மாவட்டங்களில் இதுபோன்று அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகளால் கிராம மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதை நாங்கள் பார்த்துள்ளோம். அதுமட்டுமின்றி சுரங்கப்பாதையின் இருபுறங்களிலும் ஏரி அமைந்துள்ளதால், மழை காலங்களில் இந்த சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கிவிடும். போக்குவரத்தும் துண்டிக்கப்படும். மேலும் இந்த சுரங்கப்பாதை திட்டத்தை செயல்படுத்தினால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த சுரங்கப்பாதை திட்டத்தை ரத்து செய்து, மேம்பாலம் அமைக்க வேண்டும் என கூறினர்கள்.

இதை கேட்ட அதிகாரிகள் இதுபற்றி கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் கலெக்டர் நேரில் வந்து உறுதியளிக்க வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றபோது, அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் கைகளை பிடித்துக் கொண்டு, கைது செய்ய முயன்ற போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட 187 பேரை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேன்களில் ஏற்றி விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் மதியம் விடுவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக விழுப்புரம்- ராமானுஜபுரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story