அனைவரது பாதுகாப்பை உறுதி செய்யவே போலீசார் சோதனை செய்கின்றனர் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு


அனைவரது பாதுகாப்பை உறுதி செய்யவே போலீசார் சோதனை செய்கின்றனர் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 29 April 2018 11:09 PM GMT (Updated: 29 April 2018 11:09 PM GMT)

அனைவரது பாதுகாப்பை உறுதி செய்யவே போக்குவரத்து போலீசார் சோதனை நடத்துகின்றனர் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர்,

விருதுநகர் ஏ.ஏ.ஏ. என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் நிகழ்ச்சி கலெக்டர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

பஸ் டிரைவர்கள் தன் பாதுகாப்பு மட்டும் இன்றி பயணிகளின் பாதுகாப்பையும் மனதில் கொள்ள வேண்டும். பஸ்சில் பயணம் செய்வோரை நம்பி அவர்களின் குடும்பம் இருக்கிறது. சாலையில் செல்வோர் எந்த மனநிலையில் பயணிக்கிறார்கள் என்பதையும் சிந்தித்து பஸ்சை இயக்க வேண்டும். போக்குவரத்துக்கழக டிரைவர்களுக்கு அரசு வருடந்தோறும் உடல் பரிசோதனை, கண் பரிசோதனை செய்வதோடு அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இரவு நேர பயணங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். முன் செல்லும் வாகனங்களின் செய்கையை மதிக்க வேண்டும். முறையாக சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

பெண்கள், வயதானவர்கள் என பலர் வாகனங்களை பயன்படுத்துவதால் அவர்களின் எண்ணங்களை உணர்ந்து வாகனங்களை இயக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் சோதனைகளில் ஈடுபடுவது அனைவரின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகத்தான். எனவே சாலை விதிகளை முறையாக கடை பிடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

பின்னர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பஸ்சை பார்வையிட்டு பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பஸ்சை இயக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.

விருதுநகர் தனியார் மற்றும் மினி பஸ்கள் உரிமையாளர் சங்கதலைவர் சண்முகய்யா, ஏ.ஏ.ஏ. கல்லூரி முதல்வர் அருள்மொழி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார். 

Next Story