பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு 3 பேர் கைதோடு முடிக்கப்பட்டு விடுமா?, தொடர் விசாரணையில் தொய்வு


பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு 3 பேர் கைதோடு முடிக்கப்பட்டு விடுமா?, தொடர் விசாரணையில் தொய்வு
x
தினத்தந்தி 29 April 2018 11:15 PM GMT (Updated: 29 April 2018 11:12 PM GMT)

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு 3 பேர் கைதோடு முடிவுக்கு வந்ததாக கருதப்படும் நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தொடர் விசாரணையில் தொய்வு ஏற்பட்டு விட்டது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து பேராசிரியை நிர்மலாதேவி செல்போனில் பேசிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்கள் மூலம் தமிழகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னரே போலீசார் இப்பிரச்சினை தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் மனுவை பெற்று பேராசிரியை நிர்மலாதேவியை கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த பிரச்சினையில் முக்கியத்துவம் கருதி தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றிய நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்தார். இது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் விசாரணைக்குழு அதிகாரி சந்தானம் தனது விசாரணையை தொடங்கினார்.

இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியை நிர்மலாதேவியையும், அவர் தன்னை செல்போனில் பேசத் தூண்டியதாக சுட்டிக் காட்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரை கைது செய்தும், இந்த மூவரையும் 4 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். நிர்மலாதேவி ஏற்கனவே மாவட்ட போலீசாரின் விசாரணையில் தெரிவித்த தகவலை விட சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கூடுதலாக எந்த தகவலையும் சொல்லவில்லை என்றும், செல்போனில் பேசும் போது கூறிய உயர் அதிகாரிகள் யார் என சொல்ல மறுத்து விட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பேராசிரியர்கள் முருகன் மற்றும் கருப்பசாமியிடம் விசாரணை முடிவிற்கு வந்துள்ள நிலையில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் யார் என்ற முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே உள்ளது.

நிர்மலாதேவி, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை வளையத்தில் இருக்கும் போதே மதுரை காமராஜர் பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு துறை இயக்குனர் கலைச்செல்வன், தொலைநிலை கல்வித்துறை இயக்குனர் விஜயதுரை ஆகியோர் தொடர்ந்து இரு நாட்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ஆனாலும் விசாரணைக்கு பின் இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதே போன்று கிருஷ்ணன்கோவிலைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் தங்கப்பாண்டியன் என்பவர் தொடர்ச்சியாக 3 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இது தவிர கல்லூரி பேராசிரியர்கள், தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளும் பலமுறை விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். விசாரணைக்கு வந்த உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை இருக்குமா? என்று சி.பி.சி.ஐ.டி. விசாரணை குழுவில் உள்ள ஒரு அதிகாரியிடம் கேட்ட போது, அதற்கு முகாந்திரம் இல்லை என தெரிவித்தார்.

கடந்த 20-ந் தேதி முதல் நேற்று வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் உயர் அதிகாரிகளையும், காண்டிராக்டர்களையும், கல்லூரி பேராசிரியர்களையும் அழைத்து விசாரணை நடத்தினர். நேற்றும் மதுரையை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் குமாரராஜ், பழனியைச் சேர்ந்த செல்வராஜ், பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கருப்பையா உள்பட சிலரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அனைத்தும் முக்கியத்துவம் இல்லாத நிலையில் பெயரளவிற்கு நடத்தப்பட்டதாகவே கூறப்படுகின்றது.

மொத்தத்தில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை வளையத்திற்கு வந்த பின்னர் அடுத்த இரு நாட்களில் விசாரணையில் தொய்வு ஏற்பட்டு விட்டதாக சொல்லப்படுகின்றது. பேராசிரியர்கள் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரது வீடுகளில் செய்யப்பட்ட சோதனைகளும் விசாரணையின் போக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

இன்று(திங்கட்கிழமை) சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவல் முடிந்து பேராசிரியர்கள் முருகனும், கருப்பசாமியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் பரபரப்பாக தொடங்கிய இந்த விசாரணை இந்த 3 பேர் கைதோடு எவ்வித பரபரப்பும் இன்றி முடிந்து விடும் என்றே கருத வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா, பேராசிரியை நிர்மலாதேவி தனது செல்போன் பேச்சில் குறிப்பிட்டுள்ள உயர் அதிகாரிகள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி விசாரணை அதிகாரி சந்தானத்திடம் நேற்று முன்தினம் மனு கொடுத்ததோடு இப்பிரச்சினையில் தனது கணவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என புகார் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகள் யார் என்பதை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை முடிவிற்கு வந்துள்ள நிலையில் விடை காணாதநிலை தொடர்கிறது. விசாரணை அதிகாரி சந்தானம் இது குறித்து தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிடுகின்றாரா என்பது அறிக்கை வெளியான பிறகு தான் தெரிய வாய்ப்பு ஏற்படும். அவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தாலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியே.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரை பொறுத்தமட்டில் இதுவரை அவர்கள் நடத்தியுள்ள விசாரணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும் பணியிலேயே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகர்வதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்றே கூறப்படுகின்றது. 

Next Story