பொக்லைன் எந்திரம் மீது ராட்சத பாறை விழுந்ததால் அடியில் சிக்கினார்: 10 மணி நேர போராட்டத்துக்கு பின்பு மீட்கப்பட்ட டிரைவர் சாவு


பொக்லைன் எந்திரம் மீது ராட்சத பாறை விழுந்ததால் அடியில் சிக்கினார்: 10 மணி நேர போராட்டத்துக்கு பின்பு மீட்கப்பட்ட டிரைவர் சாவு
x
தினத்தந்தி 29 April 2018 11:15 PM GMT (Updated: 29 April 2018 11:13 PM GMT)

பொக்லைன் எந்திரம் மீது ராட்சத பாறை விழுந்தது. இதில் எந்திரத்தின் அடியில் சிக்கி 10 மணி நேர போராட்டத்துக்கு பின்பு மீட்கப்பட்ட டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அருமனை, 

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியை அடுத்த துண்டத்தாராவிளையில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் பெரிய பாறைகளை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் உடைத்து வேலி கற்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று முன்தினம் முன்சிறை பகுதியை சேர்ந்த டிரைவர் விஜு மோன் (வயது 32), பொக்லைன் எந்திரம் மூலம் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்த ராட்சத பாறை திடீரென நகர்ந்து, பயங்கர சத்தத்துடன் பொக்லைன் எந்திரம் மீது விழுந்தது. இதில் பொக்லைன் எந்திரம் அப்பளம் போல் நொறுங்கியது.

அதை இயக்கி கொண்டிருந்த விஜு மோன் எந்திரத்தின் அடியில் சிக்கிக் கொண்டார். அவரது இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் பாறை விழுந்து அமுக்கிய பொக்லைன் எந்திரத்துக்குள் சிக்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த குழித்துறை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு விஜுமோனுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் பிராணவாயு செலுத்தி முதல் உதவி வழங்கப் பட்டது.

மீட்பு பணிக்காக பாறையை அறுக்கும் நவீன எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாறையை நைசாக அறுத்து சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு விஜுமோன் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு இடுப்பு, காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து விஜுமோனை சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி விஜுமோன் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இறந்த விஜு மோனுக்கு அனிஜா என்ற மனைவியும், அபினவ் (6), அபிகா (5) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பொக்லைன் எந்திரம் மீது ராட்சத பாறை விழுந்ததால் இடுப்பு, கால்கள் சிக்கி படுகாயமடைந்த நிலையில் 10 மணி நேரமாக உயிருக்காக போராடிய டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story