காவிரி பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும் வைகோ பேட்டி


காவிரி பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 14 May 2018 4:30 AM IST (Updated: 14 May 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் ம.தி.மு.க.வின் 25-வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அரவக்குறிச்சிக்கு நேற்று வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி தண்ணீர் வரவிடாமல் செய்து, தமிழகத்தை பாலைவனமாக்கி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் எரிவாயு திட்டங்களில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற மத்திய அரசின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலம் அமைக்க மாநில அரசை வலியுறுத்தி வரும் நிலையில், கடலூர், நாகை மாவட்டங்களை பெட்ரோலிய ரசாயன பொருட்கள் முதலீட்டு மண்டலமாக அறிவித்து 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனர். இது தமிழக அரசு செய்த பச்சை துரோகம். இதனை மன்னிக்கவே முடியாது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு வஞ்சகம் தான் செய்கின்றனர். உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க உரிய தீர்ப்பு வழங்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. எனவே ஒட்டுமொத்த தமிழக மக்களும் கிளர்ந்து எழுந்து, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு அறப்போராட்டங்களை நடத்த வேண்டும் என கருதுகிறேன். மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிற கூட்டத்தில் கூட இதனை முன்வைப்பேன்.

20 கோடி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிற சில்லறை வர்த்தகத்தினை அடியோடு அழிக்கிற முனைப்பில் ஆன்லைன் வர்த்தகத்தை முன்பிருந்த அரசு கொண்டு வர இருந்தபோது, அதை பா.ஜ.க.வின் அருண்ஜெட்லி மாநிலங்களவையில் கடுமையாக எதிர்த்து பேசினார். தற்போது இவர்கள் (பா.ஜ.க) ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறார்கள்.

இந்தியாவின் வணிக நிறுவனமான பிளிப்கார்ட்டின் 70 சதவீத பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்கி இருக்கிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் நுழைந்தால் உள்நாட்டு வணிகம் அழியும். இதனால் சிறு, குறு வியாபாரிகளின் வாழ்க்கை நசிந்து போகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அரவக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ம.தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் திராவிட இயக்கத்தின் இன்னொரு பரிணாமமாக மலர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் வெள்ளி விழாவை மாவட்ட வாரியாக இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழாவை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முழு நாள் மாநாடாக நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story