மீனவர்களிடையே மோதல் சம்பவம்: புதுச்சேரி மீனவர்கள் கடலூருக்கு மீன்பிடிக்க வந்ததால் பரபரப்பு
மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் எதிரொலியாக நேற்று புதுச்சேரி மீனவர்கள் கடலூருக்கு மீன்பிடிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி கடலூர் மீனவர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
ரெட்டிச்சாவடி,
கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் தேவனாம் பட்டினம் மீனவர்கள் சோனாங்குப்பம் மீனவ கிராமத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதில் அ.தி.மு.க.பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார். 3 பேர் காயமடைந்தனர். இது பற்றி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தையொட்டி 2 மீனவ கிராமங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 15–ந்தேதியில் இருந்து கடலூர் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இந்நிலையில் நேற்று காலை கடலூர் தாழங்குடா பகுதி கடலில் புதுச்சேரி வீரமாம்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 30–க்கும் மேற்பட்ட படகுகளில் வந்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் தாழங்குடா பகுதி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தாழங்குடா, தேவனாம்பட்டினம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடற்கரையோரம் ஒன்று திரண்டனர்.
இதனால் புதுச்சேரி மீனவர்களுக்கும், கடலூர் மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இது பற்றி தாழங்குடா பகுதி மீனவர்கள் கூறுகையில், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும், தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் ஏற்பட்ட மோதலால் கடலூர் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதை பயன்படுத்தி புதுச்சேரி மாநில மீனவர்கள் கடலூர் பகுதிக்கு வந்து சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் புதுச்சேரி– கடலூர் மீனவர்களிடையே மோதல் ஏற்படும். ஆகவே புதுச்சேரி மீனவர்கள் கடலூர் பகுதிக்கு வந்து கடலில் மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்றனர். பின்னர் புதுச்சேரி மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் ரெட்டிச்சாவடி, தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் கடலூர் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் கடலூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.