பாதி ஆடையுடன் ஒரு நாள் கொண்டாட்டம்


பாதி ஆடையுடன் ஒரு நாள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 20 May 2018 11:52 AM IST (Updated: 20 May 2018 11:52 AM IST)
t-max-icont-min-icon

முழுமையாக ஆடைகள் அணிந்து நாகரிகமாக வாழும் இந்த மனித சமூகத்தில் ‘நோ பேண்ட் டே’ என்றொரு நாளும் கொண்டாடப்படுகிறது.

முழுமையாக ஆடைகள் அணிந்து நாகரிகமாக வாழும் இந்த மனித சமூகத்தில் ‘நோ பேண்ட் டே’ என்றொரு நாளும் கொண்டாடப்படுகிறது. அன்று மட்டும் ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு கீழ் அணியும் பேண்ட் மட்டும் அணியாமல் தங்கள் பணிகளை கவனிக்க செல்கிறார்கள். இது ஒரு ஜாலிக்காகத்தான். இந்த வினோத கொண்டாட்டத்தில் இடம்பெறும் அனைவரும் மேல் ஆடையோடு வலம் வருவார்கள். கீழ்ப் பகுதியில் உள்ளாடை மட்டும் இருக்கும். அன்று பாதி ஆடையோடு அலைவதால் தயங்கி, யாரும் தங்கள் வேலையை பாதியாக்கிக்கொள்வதில்லை. எங்கு வேண்டுமானாலும் பயணிக்கிறார்கள். எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். அவர்களை பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், யாரும்- யாரையும் பார்த்து நக்கலாக சிரிக்கமாட்டார்கள். இது வேடிக்கைக்காக கொண்டாடப்படுவது என்பதால் அனைவரும் தயக்கமின்றி பங்குபெறுகிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கவே இந்த பாதி ஆடை கொண்டாட்டம் நடைபெறுவதாக சொல்கிறார்கள்.

இந்த பாதி ஆடை கொண்டாட்டம் தொடங்கியது அமெரிக்காவில். அதற்கு காரணமாக இருந்தவர்கள் டெக்ஸாஸ் பகுதி மாணவர்கள். அன்று, அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் ஒன்றாக கூடியிருந்தார்கள். பரீட்சைக்காக அதிக நேரம் படித்து சோர்ந்து போயிருந்த அவர்கள், பரீட்சை முடிந்த சந்தோஷத்தை எப்படி கொண்டாடுவது என்று சிந்தித்தார்கள். அப்போது அவர் களது சிந்தனையில் உதயமானதுதான், நோ பேண்ட் டே.

வருடத்தில் ஒரு நாள் முழுவதும் பேண்ட் அணியாமல் ஊர்சுற்றுவது அவர்களுக்கு குதூகலமாக இருந்தது. முதல் ஆண்டு கல்லூரி மாணவர்கள் மட்டும் இந்த அரை ஆடை சுதந்திர அனுபவத்தை ரசித்தனர். அடுத்த ஆண்டு வெவ்வேறு துறையை சார்ந்தவர்களும் இந்த கொண்டாட்டத்தில் தங்களையும் ஈடுபடுத்திக்கொண்டார்கள். இந்த பாதி உடை சுதந்திரம் பலரையும் கவர்ந்துவிட்டதால் நாடுவிட்டு நாடு பரவியது. தற்போது பல்ேவறு நாடுகளில் கொண்டாடப்படும் இந்த நோ பேண்ட் டே, கலாசாரம் இந்தியாவிற்கும் வந்துவிட்டது.. பெங்களூருவில் கொண்டாடப்பட்டிருக்கிறது.

என்னதான் அழகான உடை அணிந்தாலும் அது உடலுக்கு பாரமாக இருப்பதாகவே பலரும் கருதுகிறார்கள். அதனால்தான் வீடு திரும்பியதும் முதல் வேலையாக எளிமையான தளதள ஆடை ஒன்றுக்கு மாறிவிடுகிறார்கள். அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சுவிடுகிறார்கள். வீட்டிலே இருப்பதுபோல் வெளியேயும் உடை விஷயத்தில் ஜாலியாக இருக்க நினைத்தவர்கள் இந்த நோ பேண்ட் டேயை விடாமல் பிடித்துக்கொண்டார்கள்.

மக்கள் இந்த பாதி ஆடை நாளை வரவேற்கத் தொடங்கியதும், அதில் வியாபாரமும் புகுந்துகொண்டது. அதாவது அன்று உள்ளாடையுடன் மக்கள் நடப்பதால், அவர்களுக்காக விதவிதமான உள்ளாடைகளை பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. போட்டிப்போட்டி அழகான வேலைப்பாடுகள் அதில் உருவாக்கப்படுகின்றன. நிறைய சவுகரியங்களையும் அந்த உள்ளாடையில் உருவாக்குகிறார்கள். மக்களும் அவைகளை பெருமளவு வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

பேண்ட் அணியாமல் அன்று ஆண்களும், பெண்களும் வெளியே வந்தாலும் அன்று அவர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியான மனநிலையிலே இருப்பார்கள். சந்தோஷமாக பேசி சிரித்துக்கொண்டு நடப்பார்கள். இந்த ஆடைக் குறைப்பால் அன்று முழுவதும் தாங்கள் மன அழுத்தம் எதுவும் இல்லாமல் வேலைபார்த்ததாகவும் அவர்கள் சொல்கிறார்கள். இதனால் நோ பேண்ட் டேயில் பிரபலங்களும் கலந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த கொண்டாட்டத்திற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்திருக்கிறார்கள். ‘யாரும் யாரையும் உற்றுப்பார்க்கக்கூடாது’ என்பதுதான் அந்த நிபந்தனை!

மன அழுத்தம் இன்று மக்களை பெருமளவு வாட்டுவதால், மாற்றங்களை உருவாக்கி அதன் மூலம் மகிழ்ச்சியை பெற மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அது வேடிக்கையாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக புதிது புதிதாக விளையாட்டு களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ‘சாண்ட் டே’ என்ற பெயரில் சேற்றில் உருண்டு புரள்கிறார்கள். ஒருவர் மீது ஒருவராய் சேற்றை வாரி பூசிக்கொள்ளவும் செய்கிறார்கள். ‘தக்காளி நாள்’ கொண்டாட்டத்தில் லாரி லாரியாய் தக்காளியை வாங்கி அதை சக்கையாய் பிழிந்து குளியல் போட்டு, ஆளாளுக்கு வீசி எறி கிறார்கள்.

சேற்று கொண்டாட்டம் உடலை அசுத்தப்படுத்திவிடும். தக்காளி கொண்டாட்டத்திற்கு செலவு அதிகம். இந்த நோ பேண்ட் டேக்கு எந்த செலவும் இல்லை. தேவைப்பட்டால் மட்டும் புதிய உள்ளாடை வாங்கவேண்டும். இருக்கிறதையே அணிந்து கொண்டு நடந்தாலும் யாரும் உற்றுப்பார்க்கப் போவதில்லை.

பெண்களும் இந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாட முன்வந்துவிட்டதால் அவர்களுக்காகவும் பேஷன் உள்ளாடைகள் தயாராகின்றன. ஆண்களின் உள்ளாடைகளைவிட அதில் அதிக பூ வேலைப்பாடுகள் இருக்கின்றன. பல வண்ணங் களிலும், வடிவங்களிலும் அவைகளை உருவாக்குகிறார்கள். பெண்கள் வாங்கும் அந்த பேஷன் உள்ளாடைகளுக்கு பொருத்தமாக பெண்கள் சாக்ஸ் வாங்கி அணிகிறார்கள். அதனால் அந்த வியாபாரமும் சூடுபிடித்துவிட்டது. அதோடு பெண்களுக்கான அழகு நிலையங்களிலும் கூட்டம் அலை மோதத் தொடங்கிவிட்டது.

பெண்களின் கால்களில் தேவையற்ற ரோமங்கள் நிறைய இருக்கும். மற்ற நாட்களில் எல்லாம் உடையால் மறைத்துவிடுவதால் அவர்களுக்கு அது பற்றி கவலையில்லை. நோ பேண்ட் டேயில் கால்கள் பளபளவென்று அழகாக தெரியவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் கொண்டாட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பெண்கள் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

“இதை ஒரு ஆடைக் குறைப்பு நிகழ்வாக பார்க்கக்கூடாது. நல்ல மாற்றமாக உணரவேண்டும். இதன் மூலம் மக்களிடம் பரந்த மனப்பான்மை தோன்றும். நல்ல பார்வை உருவாகும். அதன் மூலம் நல்ல சிந்தனை உருவாகும். எப்போதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்திற்கு மாற்றம் மிக அவசியம். மாற்றமே மனித சமூகத்திற்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும். அதை நோ பேண்ட் டே கொடுக்கிறது” என்று அதில் கலந்துகொள்ளும் பெண்கள் சொல்கிறார்கள்.

Next Story