கோவையில் வீட்டுவேலை செய்த பெண் கழுத்தை நெரித்து கொலை, டிரைவர் பிடிபட்டார்


கோவையில் வீட்டுவேலை செய்த பெண் கழுத்தை நெரித்து கொலை, டிரைவர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 20 May 2018 9:45 PM GMT (Updated: 20 May 2018 8:14 PM GMT)

கோவையில், வீட்டு வேலை செய்து வந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரது பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி சாக்கடையில் வீசிய டிரைவர் பிடிபட்டார்.

கோவை,

கோவை சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் பிளேக் மாரியம்மன் கோவில் எதிரில் திருச்சி சாலையோரம் சாக்கடை செல்கிறது. அதில் ஒரு சாக்குமூட்டையின் மேல் ஏராளமான ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. இதை பார்த்தவர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உதவி கமி‌ஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், சப்–இன்ஸ்பெக்டர் அர்ஜூன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் அங்கு கிடந்த சாக்குமூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தை நைலான் கயிற்றால் நெரித்ததற்கான தடம் இருந்தது. அந்த பெண் கொலை செய்யப்பட்டு 2 அல்லது 3 நாட்கள் ஆகியதால் உடல் லேசாக அழுகிய நிலையில் காணப்பட்டது.

அந்த பெண்ணின் 2 கால்களும் ஒன்று சேர்த்து கட்டப்பட்டிருந்தது. அந்த பெண்ணின் உடலில் கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் எதுவும் இல்லை. ஆனால் காலில் மெட்டி மட்டும் இருந்தது. சாக்கு மூட்டைக்குள் புற்கள் இருந்தால் புதர்கள் நிறைந்த பகுதியில் வைத்து கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

மேலும் சாக்குமூட்டையை சிறிய சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்து கொலையாளிகள் அங்கு போட்டிருக்கலாம் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் பிணத்தை கோவை அரசு ஆஸ்பத்திரி சவகிடங்கிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்த பெண், அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற அடிப்படையில்போலீசார் உடனடியாக கோவை மாநகரில் சமீபத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலை தயாரித்தனர்.

இதில் கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 17–ந் தேதி ஜெயந்தி என்ற பெண் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. எனவே அந்த புகார் கொடுத்தவர்களை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் வரவழைத்தனர். அவர்கள் வந்து பிணத்தை பார்த்தனர்.

அதில் பிணமாக கிடந்த ஜெயந்தி தனது மனைவி என்று சிவக்குமார் என்பவர் அடையாளம் காட்டி உறுதி செய்தார். கொலை செய்யப்பட்ட ஜெயந்தி ராமநாதபுரம் ராமலிங்க ஜோதிநகரை சேர்ந்தவர். இவர் வீட்டில் பாத்திரங்கள் கழுவுதல் போன்ற வீட்டு வேலைகளை செய்து வந்தார். சிவக்குமார் சலவை தொழிலாளி ஆவார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

பிணமாக கிடந்த பெண்ணை பற்றிய அடையாளம் தெரிந்ததை தொடர்ந்து சிங்காநல்லூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ராமநாதபுரம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. காணவில்லை என்று பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

சந்தேகத்தின் பேரில் விசாரணை

இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஜெயந்தியின் கணவர் சிவக்குமாரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட ஜெயந்தி வேலை செய்த வீடுகளில் உள்ளவர்கள், அவருடைய செல்போனில் பேசியவர்கள் என 20 பேருக்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ஜெயந்தியை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? ராமநாதபுரம் பகுதியில் வீட்டு வேலைக்கு சென்றவர் சிங்காநல்லூர் பகுதிக்கு எப்படி சென்றார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கற்பழித்துக்கொலையா?

போலீசாரின் தீவிர விசாரணையில் ராமநாதபுரம், ராமலிங்கம் ஜோதி நகரை சேர்ந்த டிரைவர் மணிவேல் (வயது34) என்பவர் பிடிபட்டார். ஜெயந்தி, அரசியல் பிரமுகர் ஒருவரின் மாமனார் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். வீட்டில் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தனர். டிரைவர் மணிவேல் மட்டும் அந்த வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது வீட்டு வேலைக்காக சென்ற ஜெயந்தியை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி சாக்கடையில் வீசியது தெரிய வந்தது. ஜெயந்தி அணிந்து இருந்த 4 பவுன் நகையும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக மணிவேலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜெயந்தியின் உடலில் காயங்கள் உள்ளதால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா?. இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்ணை கொன்று பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி சாக்கடையில் வீசிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story