வீரவநல்லூரில் பரிதாபம் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி சாவு


வீரவநல்லூரில் பரிதாபம் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 21 May 2018 3:53 AM IST (Updated: 21 May 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூரில் மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார். ஏற்கனவே 2 முறை நண்பர்களை ஏமாற்றியதால், தாமதமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவர் சோகமுடிவை தேடிக் கொண்டார்.

நெல்லை,

வீரவநல்லூர் மாதான்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகன் மாடசாமி(வயது35). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன.

இந்தநிலையில் குடும்பதகராறு காரணமாக நேற்று முன்தினம் மாடசாமி வீட்டில் மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கியநிலையில் கிடந்தார். அவரை நண்பர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில், ‘மாடசாமி ஏற்கனவே 2 முறை விஷம் குடித்தேன் என்று பெயருக்கு குறைந்த அளவிற்கு விஷத்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு வீட்டில் குடும்பத்தினர்களையும், நண்பர்களையும் ஏமாற்றி உள்ளார். இதனால் நேற்று முன்தினம் அவர் குடும்ப பிரச்சினையில் மனமுடைந்து உண்மையிலேயே அதிக அளவில் விஷத்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு நண்பர்களிடம் கூறிஉள்ளார்.

அவர் வழக்கம்போல் ஏமாற்றுவதாக நினைத்து நண்பர்கள் அவரை முதலில் கண்டுகொள்ளவில்லை. நீண்டநேரமாக கதறிய அவர் திடீரென மயங்கியவுடன் பதறிப்போன நண்பர்கள், அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்து உள்ளனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இந்த விவரம் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story