சேலத்தில் துணிகரம்: பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 14½ பவுன் நகை அபேஸ்


சேலத்தில் துணிகரம்: பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 14½ பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 30 May 2018 12:13 AM GMT (Updated: 30 May 2018 12:13 AM GMT)

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 14½ பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது.

சேலம்,

சேலத்தில் பரிகாரம் செய்வதாக கூறி, பெண்ணிடம் 14½ பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பூசாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி(வயது 45). நேற்று முன்தினம் இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருடைய வீட்டுக்கு மர்ம ஆசாமி ஒருவன் வந்தான். அவன், சாந்தியிடம் உங்கள் வீட்டில் நிறைய பிரச்சினைகள் உள்ளது என்றும், அதை தீர்க்க வேண்டும் என்றால் உடனடியாக பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறினான். இதை நம்பிய சாந்தி பரிகார பூஜைக்கு சம்மதித்துள்ளார்.

இதையடுத்து மர்ம ஆசாமி வீட்டின் வாசல் பகுதியில் வைத்து பூஜை செய்துள்ளான். பூஜை தட்டில் வீட்டில் இருக்கும் நகையை ஒரு பொட்டலத்தில் வைக்குமாறு சாந்தியிடம் கூறினான். அதன்படி அவரும் 14½ பவுன் நகையை பூஜை தட்டில் வைத்துள்ளார். பின்னர் வீட்டில் சிறிது நேரம் மர்ம ஆசாமி பூஜை செய்துள்ளான்.

பின்னர் மர்ம ஆசாமி, பூஜையில் வைத்திருந்த அந்த பொட்டலத்தை சாந்தியிடம் கொடுத்து வீட்டுக்குள் இருக்கும் சாமி படம் முன்பு வைத்து சிறிது நேரம் கழித்து பிரித்து பார்க்குமாறு கூறினான். இதனிடையே நைசாக மர்ம ஆசாமி 14½ பவுன் நகையை அபேஸ் செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான்.

பின்னர் சாந்தி பொட்டலத்தை பிரித்து பார்க்கும் போது அதில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக அழகாபுரம் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story