முள்ளக்காட்டில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதார சீர்க்கேடு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

முள்ளக்காட்டில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதார சீர்க்கேடு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 May 2018 9:00 PM GMT (Updated: 30 May 2018 2:20 PM GMT)

முள்ளக்காட்டில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டு உள்ளதால், கழிவுநீர் தேங்காமல் சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஸ்பிக்நகர்,

முள்ளக்காட்டில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டு உள்ளதால், கழிவுநீர் தேங்காமல் சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வாய்க்கால்

தூத்துக்குடியை அடுத்துள்ள அத்திமரப்பட்டி பகுதியில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. அங்கு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் போக, மீதம் உள்ள தண்ணீர் அங்கு அமைக்கப்பட்டு உள்ள வாய்க்கால் மூலம், முள்ளக்காடு பகுதி வழியாக கடலில் கலப்பது வழக்கம். கடந்த பல மாதங்களாக விவசாயத்துக்கு போதிய தண்ணீர் இல்லாததால் அந்த வாய்க்கால் உபரி நீர் இல்லாமல் காணப்பட்டது.

சுகாதார கேடு

இந்த நிலையில் முள்ளக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டு, அவை அந்த வாய்க்காலில் விடப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர், முள்ளக்காடு ரேசன் கடைக்கு பின்புறத்தில் குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து முள்ளக்காடு முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் கோபி (வயது 36) கூறும் போது, பஞ்சாயத்து நிர்வாகத்தினர் இந்த பகுதியில் கழிவு நீர் தேங்காதவாறு வாய்க்காலை சீரமைத்து, தங்கு தடையின்றி கழிவு நீர் கடலில் கலக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை என்றால் மாற்று ஏற்பாடு செய்து கழிவு நீர் தேங்க விடாமல் செய்ய வேண்டும் என்று கூறினார். இதே கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்களும் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story