மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 30 May 2018 10:45 PM GMT (Updated: 30 May 2018 7:13 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ.100 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை முடங்கியது.

விழுப்புரம்,

கடந்த 2012-ம் ஆண்டு வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது 2 சதவீத ஊதிய உயர்வு தான் அளிக்க முடியும் என்று இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்தது. இதற்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து 2 நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.

அதனை ஏற்று தேசிய அளவில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் 140 கிளைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சுமார் 1,300-க்கும் அதிகமானவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிகாரிகள், ஊழியர்கள் இல்லாமல் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில வங்கிகள் மூடிக்கிடந்தது.

இந்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டது. மாதக்கடைசியில் வேலை நிறுத்த போராட்டம் நடப்பதால், அரசு ஊழியர்கள் சம்பளம் எடுப்பது பாதிக்கப்படும், அதுபோல பணம் டெபாசிட், நிரந்தர வைப்பு நிதி கணக்கை புதுப்பித்தல், அரசு கருவூலப்பணிகள், ஏ.டி.எம். சேவை போன்றவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.100 கோடி அளவில் காசோலை பரிவர்த்தனை, பண பரிவர்த்தனை முற்றிலும் முடங்கியதாக வங்கி ஊழியர் வட்டாரங்கள் தெரிவித்தன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் முருகன் வாழ்த்தி பேசினார்.

இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் சுந்தரவரதன், பிரவீண், பிரியதர்ஷினி, குமரகுரு, வேல்முருகன், தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சீனிவாசன், நீலகண்டன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் சேகர், ஜெயச்சந்திரன், சங்கர், துரைசாமி, ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்றும் (வியாழக்கிழமை) வேலை நிறுத்தம் தொடரு கிறது. அதனால் இன்றும் வங்கி சேவைகள் பாதிக்கப் படும். 

Next Story