தாராபுரம் அருகே 3 அரசு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து


தாராபுரம் அருகே 3 அரசு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து
x
தினத்தந்தி 30 May 2018 10:00 PM GMT (Updated: 30 May 2018 7:14 PM GMT)

தாராபுரம் அருகே 3 அரசு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 2 டிரைவர்கள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.

குண்டடம்,

மதுரையில் இருந்து கோவைக்கும், திண்டுக்கல்லில் இருந்து திருப்பூருக்கும் 2 அரசு பஸ்கள் நேற்று காலை புறப்பட்டன. இவை ஒட்டன்சத்திரம் - தாராபுரம் பை-பாஸ் சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன.

அதே நேரம் இவற்றுக்கு எதிர் திசையில் கோவையில் இருந்து மற்றொரு அரசு பஸ் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தர்மராஜ் ஓட்டிவந்தார். தாராபுரம் அருகே ராம்நகர் பகுதியில் இந்த 3 பஸ்களும் வந்தபோது, கோவை-மதுரை பஸ்சை, அதன் பின்னால் வந்த லாரி முந்த முயன்றது.

இதை பார்த்த மதுரை-கோவை பஸ்சின் டிரைவர் எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சின் வேகத்தை திடீரென குறைத்தார். இதை திண்டுக்கல்-திருப்பூர் பஸ்சின் டிரைவர் ரவி(வயது 50) சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அந்த பஸ் மதுரை-கோவை பஸ்சின் பின்னால் மோதியது. உடனே டிரைவர் ரவி பஸ்சை வலது பக்கமாக திருப்பினார். அப்போது எதிரே வந்த கோவை-மதுரை பஸ் மீது திண்டுக்கல்-திருப்பூர் பஸ் நேருக்கு நேர் மோதியது.

இதில் கோவை-மதுரை, திண்டுக்கல்-திருப்பூர் பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சிதறின. கண் இமைக்கும் நேரத்தில் 3 அரசு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில், பஸ் டிரைவர்கள் ரவி, தர்மராஜ் மற்றும் 10 பயணிகள் என்று 12 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் சிகிச்சைக்கு பின்பு பயணிகள் 10 பேரும் வீட்டுக்கு சென்றனர். டிரைவர்கள் 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story