திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.1,000 கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு பணிகள் முடங்கியது


திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.1,000 கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு பணிகள் முடங்கியது
x
தினத்தந்தி 30 May 2018 11:00 PM GMT (Updated: 30 May 2018 7:27 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.1,000 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிப்பணிகள் முற்றிலும் முடங்கியது.

திருப்பூர்,

வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு தரப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வங்கிகளின் லாபத்தை வராக்கடனுக்கு அதிகமாக ஒதுக்கிவிட்டு மீதம் உள்ள தொகையில் ஊதிய உயர்வு வழங்குவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசிடம் முன்வைத்த சம்பள உயர்வை உடனடியாக தர அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று, இன்று(வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள 372 வங்கி கிளைகளில் பணியாற்றும் 3 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக வங்கிப்பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பெரும்பாலான வங்கிகள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

பின்னலாடை நகரான திருப்பூரில் வங்கிகள் வேலைநிறுத்தம் காரணமாக தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காசோலை பரிமாற்றம், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பணிகள் முற்றிலும் முடங்கியது. இதன்காரணமாக மாவட்டத்தில் நேற்று மட்டும் ரூ.1,000 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று காலை திருப்பூர் மாவட்ட அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டுக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் விஜயானந்த், பெலிக் பால்ராஜ், கார்த்திக், ராதாகிருஷ்ணன், ரவிபாபு உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்றும் நடக்கிறது.

திருப்பூர் பின்னலாடை தொழிலை பொறுத்தவரை வங்கிகள் மூலமாகவே பணப்பரிமாற்றம் அதிகம் நடக்கிறது. உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் வங்கிகள் மூலமாக பணப்பரிமாற்றம் வைத்துள்ளனர். ஆனால் வேலைநிறுத்தம் காரணமாக காசோலை பரிமாற்றம், பணப்பரிமாற்றம் உள்ளிட்டவை முடங்கியது. இதனால் தொழில்துறையினர் அவதியடைந்தனர். வேலைநிறுத்தம் காரணமாக 30 சதவீத பரிமாற்ற சேவைகள் தங்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த பாதிப்பை ஈடுகட்டுவதில் தங்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்றும் தொழில்துறையினர் தெரிவித்தனர்.

சனிக்கிழமைதோறும் பனியன் நிறுவனங்களில் சம்பளம் கொடுக்கும் நடைமுறை உள்ளது. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் பாதிப்பு அடைந்தனர். மாத கடைசிநாளில் வேலைநிறுத்தம் நடக்கிறது. இதனால் மாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்ற சம்பளத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Next Story