உலிபுரம் ஜல்லிக்கட்டில் அடங்காமல் திமிறிய காளைகள்; அடக்கி காட்டிய காளையர்கள்


உலிபுரம் ஜல்லிக்கட்டில் அடங்காமல் திமிறிய காளைகள்; அடக்கி காட்டிய காளையர்கள்
x
தினத்தந்தி 30 May 2018 10:45 PM GMT (Updated: 30 May 2018 9:31 PM GMT)

சேலம் அருகே உலிபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் அடங்காமல் திமிறிய காளைகளை பாய்ந்து சென்று காளையர்கள் அடக்கினர். மாடுகள் முட்டியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.

தம்மம்பட்டி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா, தம்மம்பட்டியை அடுத்த உலிபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் தம்மம்பட்டி, பெரம்பலூர், உலிபுரம், லால்குடி, கீரிப்பட்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளை சேர்ந்த 438 காளைகள் பங்கேற்றன. 151 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ம.செல்வம், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர்(பொ) கே.ரவிச்சந்திரன், கெங்கவல்லி தாசில்தார் வரதராஜ் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

16 பேர் காயம்

இதைத்தொடர்ந்து, வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது முரட்டு காளை ஒன்று சீறிப்பாய்ந்தது. இதைக்கண்ட மாடுபிடி வீரர்கள் அனைவரும் அங்குள்ள இரும்பு தடுப்பு கம்பியில் ஏறி நின்று கொண்டனர். இதனால் அந்த காளையை யாரும் அடக்காததால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு, வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் விரட்டி சென்று அடக்க முயற்சித்தனர். சில காளைகள் பிடிபடாமல் ஓடின. சில காளைகளின் திமிலை பிடித்து காளையர்கள் அடக்கினர். சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியின் போது மாடுகள் முட்டியதில் 16 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்த இடம் அருகே அமைக்கப்பட்டு இருந்த முகாமில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் ஸ்ரீகுமரன், விவசாய அணி இணை செயலாளர் துரை ரமேஷ், உலிபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டை பார்க்க உலிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். 

Next Story