தாதா சோட்டா ராஜன் கூட்டாளி கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை; 5 பேருக்கு 10 ஆண்டு சிறை


தாதா சோட்டா ராஜன் கூட்டாளி கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை; 5 பேருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 30 May 2018 10:30 PM GMT (Updated: 30 May 2018 10:12 PM GMT)

தாதா சோட்டா ராஜன் கூட்டாளி கொலை வழக்கில் சிறப்பு கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.

மும்பை,

தாதா சோட்டா ராஜன் கூட்டாளி கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மோக்கா சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

மும்பை திலக் நகரை சேர்ந்தவர் பாரித் தனாஷா. இவர் தாதா சோட்டா ராஜனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி மும்பை திலக் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொன்றது. தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்ட இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாதா பரத் நேபாளி தூண்டுதலின் பேரில் பாரித் தனாஷா சுட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக போலீசார் 11 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவர் மீதான இந்த வழக்கு மோக்கா சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நிறைவில், கைதான 11 பேர் மீதான கொலை குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. இந்த வழக்கில் நேற்று மோக்கா சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அப்போது, 11 பேரையும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். பின்னர் அவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி குற்றவாளிகளான ஜாபர்கான், முகமது சகிப்கான், ரவிபிரகாஷ் சிங், பங்கஜ் சிங், ரந்திர் சிங், முகமது ரபிக் சேக் ஆகிய 6 பேருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார். ரவீந்திர வரேக்கர், விஸ்வநாத் ஷெட்டி, தத்தாராயா பாக்ரே, ராஜேந்திர சவான், தினேஷ் பண்டாரி ஆகிய மற்ற 5 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். தண்டனை பெற்ற குற்றவாளிகள் அனைவரும் தாதா பரத் நேபாளியின் கூட்டாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story